Breaking News

ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதிலிருந்து விலகிச்செல்ல முடியாது : சம்பந்தன்



இலங்கை அரசாங்கத்தின் ஆதரவுடன் கடந்த வருடம் ஐ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றிக்கொள்ளப்பட்ட தீர்மானத்தில் காணப்படும் அனைத்து விடயங்களையும் இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியே ஆகவேண்டும் என்றும், இதிலிருந்து விலகிச்செல்ல சர்வதேசம் ஒருபோதும் அனுமதிக்காதெனவும் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில், அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து ஐ.நாவுக்கு தெளிவுபடுத்தும் முயற்சியில் தமிழ்த் தரப்புகள் ஈடுபட்டு வருகின்றன. அத்தோடு, இலங்கை குறித்த விமர்சனங்களை இம்முறை சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் உள்ளிட்ட அமைப்புகளும் ஐ.நா அமர்வில் முன்வைப்பதற்கு எதிர்பார்த்துள்ளன. இதுகுறித்து ஊடகமொன்றிற்கு கருத்துத் தெரிவித்த சம்பந்தன் மேற்குறித்தவாறு தெரிவித்தார்.

ஐ.நா தீர்மானத்திலுள்ள சகல விடயங்களையும் நிறைவேற்றுவது அரசாங்கத்தின் கடமையென தெரிவித்த சம்பந்தன், அரசாங்கம் இதிலிருந்து விலகிச் செல்ல முடியாதென மேலும் தெரிவித்துள்ளார். அதற்கு சர்வதேச நாடுகள் ஒருபோதும் அனுமதிக்காதெனவும் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் 29ஆம் திகதி இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கையொன்றை ஐ.நா ஆணையாளர் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கவுள்ள நிலையில், அதுகுறித்து மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளதாகவும் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.