Breaking News

தமிழர்களின் எதிர்கால செயற்பாடு இப்படியிருக்குமா? அரிச்சந்திரன்

அண்மையில் அவுஸ்திரேலியாவிற்கு யாழ் சிவில் சமூக செயற்பாட்டாளர் குருபரன் வருகை தந்தபோது அவருடைய கலந்துரையாடலில் பங்குகொள்ள சந்தர்ப்பம் கிடைத்தது.

குருபரன் ஏற்கனவே சமூகவலை தளங்கள் ஊடாக பெரும்பாலானவர்களுக்கு அறிமுகமானவராக இருந்தபோதும், நேரடியாக அவரது கருத்துக்களை அறிந்துகொள்வது மிகவும் பயனுள்ளது.

இப்பத்தி அவரது கருத்துக்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டுள்ளபோதும் இன்னும் சில முன்னேற்றகரமான சிந்தனைகளை கொண்ட சாதாரண குடியானவர்களின் கருத்துக்களையும் உள்ளடக்கியுள்ளது.

கீழ்வரும் மூன்று விடயங்கள் ஊடாக, முக்கிய கருத்துக்களை வாசகர்களுக்கு கொண்டுவருதல் பொருத்தமானது.

சமகால நிலவரங்களை பற்றியது

நல்லாட்சி அரசு வந்தபின்னர், சர்வதேச நாடுகளை பொறுத்தவரை புதிய மென்போக்கான அரசுடன் இணைந்து சென்று, கிடைப்பதை பெற்றுக்கொள்ளுங்கள் என தமிழர்களுக்கு அறிவுரை வழங்குகின்றார்கள்.

நல்லாட்சி அரசை பொறுத்தவரை காணி விடுவிப்பு என்ற விடயத்தை எடுத்துக்கொண்டால் குறித்தளவான காணிகளை விடுவிக்கப்படும், அதே நேரம் விடுவிக்கப்படுகின்ற பிரதேசத்திற்குள்ளேயே இருக்கப்போகும் இராணுவமுகாமை பற்றி யாரும் கதைக்க முன்வருவதில்லை.

அதேபோல கோவில் உண்டியல் இருக்கும் இடம் விடுவிக்கப்பட்டபோதும் கோவில் இன்னமும் இராணுவ முகாமிற்குள்ளே இருக்கின்ற சந்தர்ப்பத்தையும், ஒரு வீட்டுக்கான மலசலகூடம் விடுவிக்கப்பட்டும் வீடு இராணுவ முகாமிற்குள்ளே இருக்கின்ற நிலையும் மீள்குடியேற்றமாக காட்டப்படுகின்றது.

இதேவேளை தனியார் காணிகள் விடுவிக்கப்பட்டால் போதும் அரசகாணிகள் இராணுவத்திற்கே சொந்தம் என்ற மனநிலையும், இராணுவ பிரசன்னம் என்பது நடைமுறை வாழ்வியலில் ஒரு சாதாரண நிலைமை என்பதையும் தோற்றுவித்துவிட்டார்கள்.

தனிப்பட்ட பிணக்குகள் ஏற்படுகின்றபோது பொதுமக்கள் பொலிஸ் நிலையம் செல்வதற்கு பதிலாக, இராணுவமுகாம் சென்று தீர்வு தேடுவது நல்லது என்ற நிலைமை வந்துவிட்டமை அதன் ஒரு நீட்சியாக குறிப்பிடலாம்.

சரி இப்படியான சூழ்நிலையில் சிங்கள் அரசுகள் தரப்போகின்ற தீர்வை பெற்றுக்கொண்டு அமைதியாக வாழ்வதே நல்லது என்ற மனப்பாங்கும் எம்மக்களிடமும் உண்டு.குறிப்பாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவமிடம் அத்தகைய மனநிலை உண்டு.

அப்படியே தருவதை தான் பெற்றுக்கொள்ளப்போகின்றோம் என்றால், அதனை மக்களுக்கு தெளிவாக சொல்லி அதற்கான அரசியலை தமிழ்மக்களிடம் செய்யாமல், சமஸ்டி தீர்வு எடுப்போம் என்று பொய்யுரைத்து மக்களிடம் வாக்குகளை பெற்று அரசியலை செய்யக்கூடாது.

அப்படியான ஒரு அரசியலே – அப்படியான உணர்வை தட்டியெழுப்பி இளைஞர்களை உசுப்பேத்திவிட்டு – அன்று ஓடிப்போன தமிழ் அரசியல் தலைமைத்துவங்களை போல, அதேபிழையை இவர்களும் செய்தால் நாளை இன்னொரு அதிதீவிரமான நிலைப்பாட்டை நோக்கி இளைஞர்கள் செல்வதற்கும் இவர்களே காரணமானவர்கள் ஆவார்கள்.

சிங்கள தேசியவாத மனோநிலை பற்றியது

தமிழர்களுக்கு கௌரவமான தீர்வு ஒன்று கிடைப்பதை சிங்கள தலைவர்கள் மட்டுமல்ல சிங்கள சித்தாந்தத்தில் ஊறிப்போன சிங்கள மக்களும் விரும்பவில்லை என்ற யதார்த்தை விளங்கிக்கொள்ளவேண்டும்.

அத்தகைய சிங்கள சித்தாந்தத்தில் ஊறிப்போயிருப்பதால்தான் சம்பந்தன் தெரியாமலே கிளிநொச்சி இராணுவமுகாம் பகுதிக்க சென்றுவிட்டார் என்று தெரிந்தபின்னரும் அவரை கைது செய்யவேண்டும் கூச்சலிடுகின்றார்கள். கிழக்க மாகாண முதல்வர் மேடைக்கு செல்லும்போது இழுத்து நிறுத்தமுடிகின்றது. பின்னர் அவரையே மன்னிப்பு கேட்டு கடிதம் எழுத வைக்கமுடிகின்றது.

எனவே சிங்கள மக்கள் மனம்மாறி எங்களுக்கு தீர்வைதந்துவிடுவார்கள் என்று எதிர்பார்ப்பது, அப்படி எதிர்பார்த்து எமது கருத்துக்களை எமது தீர்வுக்கான தேடலை ஒத்திப்போடுவது ஒன்றுக்கும் உதவபோவதில்லை.

தமிழரின் எதிர்கால செயற்பாடு தொடர்பானது

1.தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் தெரிவான 16 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபையில் தெரிவான 40 வரையான தமிழ் மாகாணசபை உறுப்பினர்கள் இவர்களுக்கு கீழே வேலை பார்க்ககூடிய 150 பணியாளர்கள் என ஒரு பெரிய பலம் இருக்கின்றது.

இவர்களுக்கு பிரத்தியேக பணிகள் ஒதுக்கப்படாமல் நடைமுறை ரீதியாக என்ன செய்யப்படவேண்டுமோ அதனை செய்யக்கூடிய செய்விக்ககூடிய பலமாக இவர்கள் இருக்கின்றார்கள்.

ஆனால் அத்தகைய வளம் பயன்படுத்தப்பட்டதா முழுமையான முறையில் பயன்படுத்தப்பட்டதா என்று ஆராய்ந்தால் விளைவு சுழியமாகவே இருக்கும்.

16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் – மீன்பிடித்துறை விவசாயதுறை சமூகவளத்துறை கல்வித்துறை மீள்குடியேற்றம் என – ஒவ்வொரு துறையை பொறுப்பெடுத்து குறித்த பிரச்சனைகள் தொடர்பான தீர்வுகளை பெற்றுக்கொள்ள அவர்களது இயலுமைக்குட்பட்ட வகையில் எடுத்த நடவடிக்கை என்ன?

இதற்கான ஆலோசனைகள் தமிழ் சிவில் சமூகத்தால் வழங்கப்பட்டபோதும் இன்னமும் செய்யப்படமுடியாமல் இருப்பதற்கு காரணம் என்ன?

2.சர்வதேச விசாரணை நடக்கவிடமாட்டோம் என சிறிலங்கா அரசு சொல்கிறது. அப்படியான விசாரணை இப்போதைக்கு நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது.

ஆனால் அதுபற்றிய சாட்சிகளை திரட்டி காணாமற்போனோர்கள் பற்றிய பதிவுகளை தொகுத்து காத்திரமான ஒரு ஆவணக்கோப்பை ஏன் எங்களால் செய்யமுடியாமல் இருக்கின்றது?

முழுமையான ஒரு ஆவணக்கோப்பு தயார்செய்யப்பட்டு வைத்திருக்கப்பட்டிருக்குமானால் என்றோ ஒரு நாளைக்கு அதற்கு பதில் சொல்லவேண்டிய நிலையை நாங்கள் வைத்திருக்க முடியாதா?

3.தமிழர்கள் வாழும் ஒவ்வொரு கிராமத்திலும் என்னென்ன தேவைகள் என்னென்ன செய்யப்படமுடியும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் எத்தனை தாய்தந்தை இல்லாத பிள்ளைகள் எத்தனை வறுமையில் வாடும் குடும்பங்கள் எத்தனை என்ற ஒரு தரவுகளை பெற்று தேவைகள் என்ன பட்டியலை தயார்செய்து வைத்திருக்கின்றோமா?

ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒவ்வொரு அரசஅலுவலர் குறைந்த பட்சம் நியமிக்கப்பட்டிருக்கின்றார். ஆனால் அவர் மத்திய அரசின் பிரதிநிதியாக வேலை செய்யவேண்டிய நிலை.

எனவே மாகாணஅரசுக்குட்பட்ட ஒரு அலுவலரை நியமிப்பதற்கு வழிவகைகளை காணமுடியாதா? அதன்மூலம் அடிமட்டம் தொடக்கம் உயர்மட்டம் வரை நேரடியான தொடர்புகளை மாகாணஅரசுகளால் பேணக்கூடிய சூழல் இருக்குமல்லவா?

4.வடக்கு கிழக்கு இணைக்கப்படமாட்டாது என சிங்கள அரசு சொல்கின்றது. ஆனால் அந்த இணைப்பை எங்கள் மட்டத்தில் தமிழர்கள் மட்டத்தில் தமிழ் பிரதிநிதிகள் மட்டத்தில் ஏன் செய்யமுடியாது?

வடக்கு கிழக்கு இணைந்தவகையில் எங்களிடம் ஒரு செயற்பாட்டு மையம் அல்லது தொண்டுநிறுவனம் இருக்கின்றதா? வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்கள் தாங்கள் இணைந்தவர்கள் என்ற மனப்பாங்கை உருவாக்குவதற்கு நாம் என்ன செய்திருக்கின்றோம்?

வடக்கு கிழக்கு இணைந்த மட்டத்தில் எங்களால் எடுக்கபப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். தமிழ் மாகாணசபை உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். இவர்கள் அனைவரும் உ வடக்கு கிழக்கு இணைந்த மட்டத்தில் – ஒரு மேசையில் இருந்து ஒரு மாநாடு நடத்த மைத்திரியா அனுமதி கொடுக்கவேண்டும்?

5.தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் நடைபெறும் இனஅடக்குமுறைகள் சிங்கள குடியேற்றங்கள் அதிகாரதுஸ்பிரயோகங்கள் காணி அபகரிப்புகள் அல்லது முழுமையற்ற காணி விடுவிப்புகள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பாக மாதாந்தம் ஒரு அறிக்கை ஒன்றை பலமான ஒரு கட்டமைப்பின் ஊடாக கொண்டுவருவதன் ஊடாக அவற்றை நாம் ஆவணப்படுத்தலாம் அல்லவா?

அந்த ஆவணங்களையே நல்லாட்சி அரசின் முன்னேற்றங்களாக சர்வதேச நாடுகளின் தூதுவர்களுக்கு முன்னால் கொண்டுசெல்லலாம் அல்லவா?

இப்படியாக எம்மால் செய்யக்கூடிய பலவிடயங்கள் செய்யப்படாமல் இருக்கின்றன. இவற்றை செய்யத்தவறும் பட்சத்தில் தமிழர் தரப்பு ஒரு தேக்கநிலையிலேயே இருக்கும்.

அப்படியானால் முடிவுதான் என்ன? என்ன செய்யலாம்?

வடக்கு கிழக்கு வாழ் தமிழர்களின் பிரச்சனைகளை ஆய்வுசெய்து அதற்கான பணிகளை முன்னெடுக்க ஒரு கட்டமைக்கப்பட்ட இயக்கம் அல்லது ஒரு நிறுவனம் தேவை. தமிழ்த்தேசிய கூட்டமைப்பு செய்யமுடியாத, செய்யத்தயங்குகின்ற அல்லது செய்யஇயலாத விடயத்தை தமிழ்மக்கள் பேரவை செய்யும் என எதிர்பார்க்கலாமா?

தமிழ்மக்கள் பேரவை தற்போது பல உபகுழுக்களை நியமித்துள்ளது. அவர்களால் இந்தவிடயத்தில் முன்னேற்றத்தை காட்டமுடியுமா என்பதை காலம்தான் பதில்சொல்லவேண்டும். எனினும் அதற்காக காத்திருக்கமுடியுமா?

எனவேதான் முழுநேரமாக உழைக்கக்கூடிய மனிதவளங்களை கொண்டு வளநிறுவனம் ஒன்று உருவாக்கப்படவேண்டும். ஒரு பத்துப் பணியாளர்களை உள்வாங்கி வடக்கிலும் கிழக்கிலும் முழுநேரப்பணியில் அந்த நிறுவனம் அதில் ஈடுபடலாம்.

எப்படியான செயற்றிட்டங்கள் செய்யப்படலாம் என்பதையும் எப்படியான தேவைகள் இருக்கின்றன என்பதையும் என்ன பிரச்சனைகள் இருக்கின்றன என்பதையும் அவர்கள் இனங்காணவேண்டும் கண்டறியவேண்டும் அதனை ஆவணமாக்கவேண்டும்.

செய்யப்படவேண்டிய வேலைகளை அரசியல்வாதிகள் ஊடாகவும் வெளிநாட்டு தூதுவர்கள் ஊடாகவும் கிராம கட்டுமானங்கள் ஊடாகவும் செய்யப்படுவதற்கு அவர்கள் வழிகளை கண்டறியவேண்டும்.

ஒரு நோக்கத்தோடு ஒருமித்த சிந்தனையோடு ஒரு இயக்கம் போல அவர்கள் பணியாற்றவேண்டும். இப்படியான ஒரு நிறுவனத்தை தொடக்கி தாயகத்தின் வளர்வதற்கு புலம்பெயர் தேசத்தில் வாழ்பவர்கள் கைகொடுக்கவேண்டும்.

அமெரிக்கா வந்து எங்களுக்கு சுதந்திரம் பெற்றுத்தரும் என்றும் பிரித்தானியாவுக்கு ஒரு கடமை இருக்கின்றது அது எங்களுக்கு ஏதாவது செய்யும் என்ற கற்பனைவாதத்தில் வாழாமல்எங்களுக்கான தேசத்தை எங்களுக்கான கட்டமைப்புகளை நாங்களே உருவாக்குவோம்.

– நன்றி துளியம்