Breaking News

மாத இறுதியில் இலங்கை தொடர்பில் அறிக்கை : அல் ஹுசைன் தயார்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 32ஆவது அமர்வில் எதிர்வரும் 29ஆம் திகதி வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பங்கேற்கவுள்ளதாக அமைச்சின் பேச்சாளர் மஹிசினி கொலன்னே தெரிவித்துள்ளார்.


மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் செயத் ரா-அத் அல் ஹுசைன் ஸ்ரீலங்கா தொடர்பிலான வாய்மூல அறிக்கையை அன்றைய தினம் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமைகள் ஆணையாளர், கடந்த பெப்ரவரி மாதம் ஸ்ரீலங்காவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்ததோடு, நாட்டில் அவர் அவதானித்த விடயங்களை தனது அறிக்கையில் உள்ளடக்குவார் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அல் ஹுசைன் தனது விஜயத்தின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அரசாங்கத்தின் சில முக்கிய அதிகாரிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் காணாமற்போனவர்களின் உறவினர்களை சந்தித்திருந்தார்.

பேரவையின் கடந்த அமர்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் முன்மொழியப்பட்ட விடயங்களை நிறைவேற்றுவதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் அல் ஹுசைன் விளக்கமளிப்பார் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.