இலங்கை அகதிகளை கடலில் தள்ளிவிடும் திட்டத்தில் மாற்றமில்லை – இந்தோனேசியா
தரையிறங்க அனுமதிக்கப்பட்ட இலங்கைத் தமிழ் அகதிகளை, மீண்டும் அனைத்துலக கடற்பகுதிக்கு கொண்டு சென்று விடும் திட்டம் கைவிடப்படவில்லை என்று இந்தோனேசியா தெரிவித்துள்ளது.
அவுஸ்ரேலியா நோக்கிச் செல்லும் வழியில்,படகில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறினால், இந்தோனேசியாவில் தரைதட்டிய, அகதிகள் படகு கடந்த ஒரு வாரமாக கடலில் தத்தளித்து வந்தது. படகில் இருந்த அகதிகளை தரையிறங்க விடாது இந்தோனேசிய அதிகாரிகள் தடுத்து வந்தனர்.
அகதிகளை மீண்டும் அனைத்துலக கடற்பகுதிக்கு கொண்டு செல்லும் முடிவில் இருந்த இந்தோனேசியதாவுக்கு அனைத்துலக அளவில் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து, படகில் இருந்த அகதிகளை தரையிறங்க இந்தோனேசியா நேற்று அனுமதி அளித்தது.
இதையடுத்து படகில் இருந்த அகதிகள் தரையிறக்கப்பட்டு, கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை அதிகாரிகள் ஒளிப்படங்கள் எடுத்து, விபரங்களைப் பதிவு செய்துள்ளனர்.
எனினும், படகில் உள்ள அகதிகளை மீண்டும் அனைத்துலக கடற்பகுதிக்குக் கொண்டு சென்று விடுவதில், தாம் இன்னமும் உறுதியாக இருப்பதாக, இந்தோனேசியாவின் ஆச்சே மாகாண குடிவரவு அதிகாரியான அகமட் சமடான் தெரிவித்துள்ளார்.
“அவர்களுக்கு கரையில் தங்குமிடவசதி அளிக்கப்பட்டுள்ளது. அவர்களை கடலுக்கு அனுப்பி வைக்கும் எமது ஆரம்பத் திட்டம் இன்னமும் நடைமுறையில் உள்ளது. படகு முழுமையாகத் திருத்தப்பட்டதும் அது நடைமுறைப்படுத்தப்படும்“ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்தப் படகு பழுதடைந்துள்ளதாகவும், தமக்குப் புதிய படகு தருமாறும் அகதிகள் கோரியிருந்தனர்.
“இந்தப் படகு நல்லதல்ல. இதில் சென்றால் நாம் மரணமடைய நேரிடும். தயவு செய்து எமக்கு உதவுங்கள்” என்று இந்தப் படகில் இருந்த 34 வயதுடைய பக்கி சரீன் என்பவர், படகிற்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் ஜமீலிடம் கோரியிருந்தார். இவர் தனது மனைவி மற்றும் 18 மாதக் குழந்தையுடன் படகில் பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
படகின் நிலை மோசமாக இருப்பதால், தாம் அச்சமடைந்துள்ளதாகவும், அகதிகளுக்கான ஐ.நா முகவரமைப்பின் உதவி தமக்குத் தேவை என்றும், படகில் இருந்த 22 வயதான ஆர்த்திகா என்ற பெண் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்தோனேசியாவின் ஆச்சே மாகாண பொதுமக்களும் அதிகாரிகளும், இலங்கை அகதிகளுக்கு அங்கு இடமளிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.மியான்மாரின் ரொஹிங்யா முஸ்லிம் அகதிகளுக்கு இந்தோனேசியா அடைக்கலம் அளித்து வருகின்ற போதிலும், இலங்கை அகதிகளை அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.
இவர்கள் அவுஸ்ரேலியா நோக்கிச் செல்பவர்கள் என்பதால் அவர்களுக்கு இடமளிக்கத் தேவையில்லை என்று வலியுறுத்தி வருகின்றனர். இலங்கை அகதிகளையும், ரொஹிங்யா அகதிகளையும் ஒரே வகையில் கருத முடியாது என்று ஆச்சே மாகாண அதிகாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.