Breaking News

இலங்கைத் தமிழ் அகதிகள் படகு விவகாரம் – இந்தோனேசியாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு



அவுஸ்ரேலியா நோக்கிப் பயணமாகிய போது, இயந்திரக் கோளாறினால் இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தில் தரைதட்டிய இலங்கைத் தமிழ் அகதிகள் படகை அனைத்துலக கடற்பரப்புக்குள் தள்ளிச் செல்லும் இந்தோனேசியாவின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

கர்ப்பிணிப் பெண், ஒன்பது சிறுவர்கள் மற்றும் பெண்கள் அடங்கிய 44 அகதிகள் விவகாரத்தை இந்தோனேசியா மனிதாபிமானற்ற வகையில் அணுகுவதாக அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் கண்டித்துள்ளன.

அனைத்துலக மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் இந்தோனேசியாவின் தொண்டர் நிறுவனங்களும், இதுகுறித்து கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளதுடன், மனிதாபிமான அடிப்படையில் அகதிகளை தரையிறங்க அனுமதிக்குமாறு கோரியுள்ளன.

அகதிகள் படகின் அருகே, அகதிகளுக்கான ஐ.நா முகவரமைப்பு பிரதிநிதிகள் சென்று பார்வையிட்ட போதிலும், உள்ளே சென்று பார்வையிடுவதற்கு இந்தோனேசிய அதிகாரிகள் அவர்களை அனுமதிக்கவில்லை.

எனினும், அகதிகளுக்கான ஐ.நா முகவரமைப்பு அதிகாரிகள், படகிலுள்ள அகதிகளின் விபரங்களை சேகரிக்கும் மற்றும் உதவிகளை வழங்கும் நோக்கில், அந்தப்பகுதியில் தயார் நிலையில் உள்ளனர்.

அதேவேளை, அகதிகள் படகை அனைத்துலக கடற்பரப்புக்கு இழுத்துச் சென்று இந்தியா நோக்கி அனுப்பி வைப்பதற்காக, எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்கள் நேற்று படகிற்கு அனுப்பப்பட்டன. நூடில்ஸ் மற்றும் அரிசி, குடிநீர் ஆகியனவும் அகதிகள் படகுக்கு ஏற்றப்பட்டன.

அதேவேளை, படகின் அருகே உள்ளூர் வாசிகள் செல்வதற்கும் அதிகாரிகள் தடை செய்துள்ளனர். ஊடகவியலாளர்களும் அந்தப்பகுதியில் இருந்து அகற்றப்பட்டுள்ளனர்.

மேலும், நேற்று இந்தப் படகை பெக்கோ இயந்திரத்தின் துணையுடன் கடலுக்குள் அனுப்பும் முயற்சி முன்னெடுக்கப்பட்ட போதிலும் அது தோல்வியில் முடிந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.