சொந்த நிலங்களை விடுவிக்க கோரி உண்ணாவிரதம் : வலி.வடக்கு மக்கள் தீர்மானம்
யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது சொந்த நிலங்களை விடுவிக்காவிட்டால் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக வலிகாமம் வடக்கு மக்கள் அறிவித்துள்ளனர்.
ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவை நம்பி வாக்களித்த தம்மை ஜனாதிபதி ஏமாற்றி விட்டதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பட்டதில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்கள் இவ்வாறு அறிவித்துள்ளனர்.
இதனால் எதிர்வரும் 22 ஆம் திகதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் இந்த உண்ணாவிரத போராடத்தினை தையிட்டியை சொந்த இடமாக கொண்ட வன்னியசிங்கம் பிரபா என்பவர் முன்னிண்டு நடாத்தவுள்ளார்
அத்துடன் வளம் கொழிக்கும் பூமியான தையிட்டி, மயிலிட்டி, பலாலி, காங்கேசன்துறை, ஊரணி, உட்பட ஏனைய இடங்களை ஜனாதிபதி விடுவிக்காவிட்டால் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்படும் என வலிகாமம் வடக்கு மக்கள் தெரிவித்துள்ளனர்..
அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எமது நிலங்களையும், பிள்ளைகளையும் விடுவிப்பார் என தமிழ் கட்சிகள் வலியுத்தியமைக்கு அமைய அவருக்கு வாக்களித்திருந்தோம், ஆனால் அது ஒன்றுமே இன்று வரை நடைபெறவில்லை.
எம்மை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வாக்களிக்குமாறு கூறிய தமிழ் அரசியல் கட்சிகளும் தற்போது மௌனமாக இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்களை மேற்கொள்ள நாங்கள் முயற்சி செய்த போதிலும் தமிழ் கட்சிகள் எங்களை போராட்டங்களில் ஈடுபடவிடாது தடுத்து விட்டதாக சுட்டிக்காட்டிய வலிகாமம் வடக்கு மக்கள், நல்லாட்சியை குழப்பம் செய்யக்கூடாது என அரசியல் கட்சிகள் தெரிவித்தாகவும் குறிப்பிட்டனர்.