ஐ.நா தீர்மானத்தை நிறைவேற்ற பிரித்தானியா முழுமையான ஆதரவு
ஐ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை அமுல்படுத்துவதற்கு பிரித்தானியா தனது முழுமையான ஆதரவினை வழங்கத் தயாராக இருப்பதாக, ஐ.நா மனித உரிமை பேரவைக்கான பிரித்தானியாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ஜூலியன் பிரெத்வெய்ட் தெரிவிக்கின்றார்.
பிரரேரணையில் கூறப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றுவது தவிர்க்க முடியாது என்று சுட்டிக்காட்டிய அவர், இந்த பணி மிகவும் சிக்கலானது என்றும் சுட்டிக்காட்டினார்.
ஜெனிவாவில் மனித உரிமை பேரவை அமர்வுகள் நடைபெறுகின்ற நிலையில், ஆண், பெண் வேறுபாடின்றி உலகளாவிய ரீதியில் சமத்துவம் பேணப்படல் வேண்டும் என்ற தலைப்பின் கீழ் இடம்பெற்ற கருத்தரங்கின் பின்னர் ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த ஊடகத்திடம் தொடர்ந்து குறிப்பிட்ட அவர், கடந்த முறை இலங்கைத் தொடர்பில் ஐ.நாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் மிகவும் முக்கியமானது என்று சுட்டிக்காட்டினார். இந்த தீர்மானத்திற்கு இலங்கை அனுசரனை வழங்கியுள்ள நிலையில், அதனை நிறைவேற்றுவது எந்தளவிற்கு சிரமமானது என்று நன்கு அறிவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.