Breaking News

இனப்பிரச்சினைக்குமுன் மொழிப்பிரச்சினைக்கு தீர்வு தேவை

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு முன்னதாக மொழிப் பிரச்சினைக்கு தீர்வொன்றைக் காண்பது அவசியமாகின்றது என தேசிய மொழிகள், நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

சிங்கள மொழியில் வழுக்களற்றதாகவும், தமிழ் மொழியில் பிழையாகவும் அறிவித்தல்களை காட்சிப்படுத்த இனியும் இடமளிக்கப் போவதில்லை என்றும் அமைச்சர் கூறினார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

வடக்கில் உள்ளவர்கள் சிங்கள மக்களுக்கு பிரச்சினை உள்ளதா என்றும், தென்னிலங்கை மக்கள் வடக்கு மக்களுக்கு பிரச்சினை இருக்கின்றதா என்றும் கேட்கின்றனர். இரண்டு பிரிவினருக்கும் தீர்க்கப்படாத பிரச்சினைகள் காணப்படுகின்றன. இந்தப் பிரச்சினைகளுக்கும் தீர்வைப் பெற்றுக் கொடுப்பது அவசியம்.

தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு அர்ப்பணிப்பு, திறமை, பொறுப்புணர்ச்சி, தைரியமுள்ள தலைமைத்துவம் தேவைப்படுகின்றது. அவை அனைத்தும் எனக்கு உள்ளன.

இதனிடையே இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதுவும் அவசியம். எனினும் இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு முன்னர் மொழிப் பிரச்சினைக்கு முடிவுகாண்பது அவசியமாகும்.

மொழிப் பிரச்சினை என்பது கையில் உள்ள பறவை போன்றது. ஆனால் தேசியப் பிரச்சினை என்பது மரத்திலுள்ள பறவையைப் போன்றதாகும். முதலில் இனப்பிரச்சினைக்கு தீர்சு காணாமல், கையிலுள்ள பறவையின் அழகை அனுபவிக்க வேண்டும். மொழிப் பிரச்சினையை தீர்க்காமல் எப்படி இனப்பிரச்சினைக்கு தீர்சு காண முடியும்?

மொழிப்பிரச்சினைக்கு தீர்சு காணாமல் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது எப்படி என கிழக்கிலுள்ள மக்களும் வினவுகின்றனர்.

நான் பேசும் சிங்கள மொழி முற்றும் சரியானது என்று கூற முன்வரவில்லை. எனினும் இரண்டாம் மொழியை கற்றுக் கொள்வதற்கான அவசியத்தையே இங்கு வலியுறுத்துகின்றேன்.

சில சந்தர்ப்பங்களில் மும்மொழிகளிலும் உள்ள பெயர்ப் பலகையை பார்த்தால் அதில் சிங்கள மொழி சரியானதாகவும், தமிழ் மொழி பிழையாகவும் எழுதப்பட்டிருக்கும்.

தமிழ் மக்கள் அதனைப் பார்த்து தமிழ் மொழியில் எழுமாமலிருக்கலாமே என்று கூறுகின்றனர். முற்றிலும் அப்பெயர் பலகையில் தமிழ் மொழி கொச்சைப்படுத்தப்பட்டு எழுதப்பட்டிருக்கும். அல்லது சிங்கள மொழி மிகப் பெரிய அளவிலும், மிகச்சிறிய அளவில் தமிழ் மொழியும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அதனை உற்றுப்பார்த்து வாசிப்பதற்காக தமிழ் மக்களுக்கு விசேட கண்ணாடி ஒன்று வழங்க வேண்டிய அவசியமும் ஏற்படும்.

இவ்வாறு செய்வதை அனுமதிக்க முடியாது. நாட்டில் உண்மையான நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமாயின் இரண்டாம் மொழியை கற்றுக் கொள்ள வேண்டும். மொழியிலிருந்தே அனைத்து பிரச்சினைகளும் உருவெடுப்பதால் ஆரம்பத்திலிருந்து பிரச்சினையை தீர்த்துக் கொள்வதே சிறந்தது – என்றார்.