இலங்கை அரசை மிரட்டுகிறார் சம்பந்தன்
ஜெனீவாவில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணையை முழுமையாக அமுலாக்குமாறு, தற்போது இடம்பெறும் மனித உரிமைகள் மாநாட்டில் வைத்து அரசாங்கத்தை வலியுறுத்துவோம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பினதும், பிரதான எதிர்கட்சியினதும் தலைவரான இரா.சம்பந்தன் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட இந்த பிரேரணைக்கு இலங்கை அரசாங்கம் இணையனுசரனை வழங்கி இருந்தது. எனவே இதனை அரசாங்கம் முழுமையாக அமுலாக்க வேண்டும். இது தொடர்பில் தாங்கள் நிர்பந்திக்கவிருப்பதாக அவர் இந்திய ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்றையதினம் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் செயிட் அல் ஹுசைனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதன்போது மறுசீரமைப்பு செயற்பாடுகளிலும், அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்துவதிலும் ஏற்பட்டுள்ள தாமதநிலை குறித்து, சுமந்திரனால், மனித உரிமைகள் ஆணையாளருக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது என கட்சியின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது