Breaking News

பொறுமையோடு உள்ளோம்: அமெரிக்காவில் சுமந்திரன் தெரிவிப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கி ஏற்றுக்கொண்ட தீர்மானத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் பொறுப்புக் கூறல் கடப்பாட்டை நிறைவேற்றுவதற்கு சிறப்பு நீதிபதிகளைக் கொண்ட நீதிமன்றம் அமைக்கும்வரை பொறுமையோடு எதிர்பார்த்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

ஆட்சி மாற்றத்தின் போது வழங்கப்பட்ட உறுதிமொழிகள் தற்போதுவரையில் நிறைவேற்றப்படவில்லை எனச் சுட்டிக்காட்டிய சுமந்திரன் எம்.பி இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து அமெரிக்கா தனது திருப்திகரமான நிலைப்பாட்டை அவசரப்பட்டு வெளியிட்டுவிடக்கூடாது எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க காங்கிரஸினால் வொசிங்டனில் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கையின் சமகால நிலைமைகள் குறித்து உரையாற்றும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் மேலும் உரையாற்றுகையில், 

கடந்த காலத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறைமை காணப்பட்டது. ஆட்சியில் அமர்ந்திருந்த கடந்த ஆட்சியாளர்கள் இரண்டு வருடங்களுக்கு மட்டுப்படுத்திருந்த ஆட்சிக்காலத்தை தமது விருப்புக்கு ஏற்றவகையில் சட்டத்தினை மாற்றி தொடர்ந்து ஆட்சியில் அமர்ந்திருப்பதனை இலக்காக வைத்து செயற்பட்டனர். இதனால் நாடு செங்குத்தான திசையில் கீழ்நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. 

வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை

இவ்வாறான நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஆட்சி மாற்றம் தமிழ் மக்களின் பங்களிப்புடன் ஏற்படுத்தப்பட்டிருந்தது. இதன்போது எமக்கு பல்வேறு உறுதி மொழிகள் வழங்கப்பட்டிருந்தன. எனினும் ஆரம்பத்தில் சொற்ப அளவிலான முன்னேற்றகரமான நிலைமைகள் காணப்பட்டிருந்த போதும் ஆட்சி மாற்றத்தின் உண்மையான மாற்றங்களை எதிர்பார்த்துக் காத்திருந்த மக்களுக்கு, அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை 

குறிப்பாக காணி விடுவிப்பு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற அரசாங்கத்தினால் நிறைவேற்றக்கூடிய விடயங்கள்கூட இதுவரை இழுத்தடிப்புச் செய்யப்பட்டு வருகின்றது. 

காணமால்போனர்வர்கள் தொடர்பான அலுவலகத்தை அமைப்பதற்கு அண்மையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. எனினும் அது தொடர்பில் முழுமையான முன்னேற்றகரங்கள் ஏற்படவில்லை. புதிய அரசியலமைப்புத் தொடர்பில் அரசாங்கம் முன்னேற்றகரமான செயற்பாடுகளை முன்னெடுத்தாலும், அன்றாடம் இடம்பெறும் பல பிரச்சினைகள் காரணமாக, மக்களுக்கு இன்னும் திருப்தியான நிலைமைகள் கிடைக்கவில்லை. 

பயங்கவாத தடைச்சட்டம்

1979ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம் தற்காலிகமாக ஆறுமாதகாலங்களுக்கே எனக் கூறி முதற்தடவையாக அமுல்படுத்தப்பட்டது. எனினும் தற்போது வரையில் அது நீடித்தவாறே உள்ளது. இந்நிலையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்குப் பதிலாக வேறு சட்டடமொன்றைக் கொண்டுவருவதற்கு சட்ட ஆணைக்குழு முயற்சிகளை எடுத்துள்ளது. அதனை விரைவில் அரசாங்கம் நடைமுறைக்குக் கொண்டுவரும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.

பொறுப்புக்கூறல்

பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கு கலப்பு நீதிமன்றமே அவசியம் என நாம் வலியுறுத்தியிருந்தோம். எனினும், இது விடயம் தொடர்பில் நடத்தப்பட்ட கலந்துரையாடல்களில் வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் விசாரணையாளர்களின் பங்களிப்புடன் விசாரணைப் பொறிமுறையொன்று பற்றி கூறப்பட்டது. இதனை நடைமுறைப்படுத்துவதாயின் இலங்கையின் அரசியலமைப்பு இடமளிக்குமா என்ற சந்தேகம் எம்மிடம் இருந்தது. 

இது பற்றி பாராளுமன்றத்தில் பல தடவைகள் சுட்டிக்காட்டியதுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற ஐ.நா தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பான சர்வ கட்சிகள் கூட்டத்தொடரிலும் இவ்விடயத்தை சுட்டிக்காட்டி கூறியிருந்தோம். தற்போது அரசாங்கம் தனது நிலைப்பாட்டை மாற்றுவது ஆச்சர்யமளிக்கிறது. இருந்தபோதும் சிறப்பு நீதிபதிகளைக் கொண்ட நீதிமன்ற பொறிமுறை அமைக்கப்படவில்லை. பிரேரணையில் குறிப்பிடப்பட்ட விடயங்களை நிறைவேற்றும் வகையில் இந்தப் பொறிமுறை அமையுமா என்பதை பார்வையிட எதிர்பார்த்திருக்கின்றோம் என்றார்.