Breaking News

இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளுக்கு பிரான்ஸ் முழுமையான ஆதரவு

இலங்கையின் நல்லிணக்கம், நல்லாட்சி அரசாங்கம் மற்றும் மனித உரிமை விவகாரங்களில் காண்பித்து வரும் அணுகுமுறைகளுக்கு  உறுதியான ஆதரவினை வழங்குமென இலங்கை மற்றும் மாலைத்தீவிற்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் மெரின் ஸ்கு (Jean Marin Schuh) தெரிவித்துள்ளார்.


இலங்கையுடனான  உறவினை மேலும் வலுப்படுத்திக் கொண்டமைக்கு இதுவே காரணமெனவும், தி ஹிந்து நாளிதழுக்கு வழங்கிய செவ்வியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் வெறும் தாள்களுக்கு மட்டும் வரையறுக்கப்படாது செயற்பாட்டு ரீதியிலும் அமுல்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தையே, பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் ஜீன் மார்க் ஹைரால்ட் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் பலிஸ் விஜயத்தின்போது தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை அரசாங்கம் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பிலான விடயங்களுக்கு செயல்வடிவம் கொடுத்துள்ளதாகவும், அண்மையில் காணாமற்போனவர்கள் தொடர்பிலான நிரந்தர அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கு எடுக்கப்பட்டிருக்கும் முயற்சி வரவேற்கப்பட வேண்டியது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.