Breaking News

நல்லாட்சி கவிழும் - ராஜித

நாட்டில், கடந்த ஆண்டு ஜனவரி 8ஆம் திகதியன்று ஏற்பட்ட மாற்றத்துக்கான கொள்கையுடனேயே இன்னும் நானிருக்கிறேன்;' என்று தெரிவித்த சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன, 'ஜனவரி 8ஆம் திகதிக்கான குறிக்கோள் தவறுமாயின், நல்லாட்சி கவிழ்ந்துவிடும் என்றும் கூறினார். 

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில், 

'மத்திய வங்கியின் ஆளுநர் தொடர்பில், அரசாங்கத்தில் இருக்கின்றவர்கள் தெரிவிக்கும் கருத்துகள், அவர்களுடைய சொந்தக் கருத்துகளாகும். இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியே இறுதி முடிவை எடுப்பார். அர்ஜுன மகேந்திரனை மத்திய வங்கியின் ஆளுநராகத் தெரிவுசெய்த அன்றே, நான் எதிர்த்தேன். அந்த நிலைப்பாட்டிலேயே இன்னுமிருக்கின்றேன்' என்றும் அவர் கூறினார். 

'நல்லாட்சி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை, உலக நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. ஆகையால், ஜெனீவா விவகாரத்தை நாம், மிகவும் இலகுவாக முகங்கொடுப்போம். ஜனநாயகப் போராட்டத்தின் சாம்பியன், தலைவன் என்றெல்லாம் உலகத் தலைவர்கள் ஜனாதிபதியை வர்ணித்துள்ளனர். மனித உரிமைகளைப் பாதுகாக்கவும் ஜனநாயகத்தை மக்களிடம் கொடுக்கப்பட்டுள்ள முறைமை தொடர்பிலும், இலங்கையிடமே கற்றுக்கொள்ளவேண்டும் என்றும் இன்னும் சில உலக நாட்டுத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். 

இவ்வாறான நிலையில், ஜெனீவா விவகாரத்தை கையாளுவதற்கு எமக்கு இன்னும் காலஅவகாசம் கிடைக்கும் என நம்புகிறோம். ஆகையால் அதனை, மெதுவாகச் செய்யலாம் என்றும் அவர் கூறினார். 'பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வு பிரிவு கலைக்கப்படாது. அது பலப்படுத்தப்படும். அதுவரையிலும் அப்பிரிவு அவ்வாறே இயங்கும் என்றும் அவர் கூறினார். 

'அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்), விசாரணைசெய்யும் விடயங்கள் இரகசியமானவை அல்ல. அக்குழுவின் உறுப்பினர்களுக்கு, ஆவணங்கள் பகிர்ந்தளிக்கப்படும். அவற்றைத் திருடவேண்டிய தேவையில்லை என்பதுடன், மஹிந்த அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேயை நியமித்தமை பிரச்சினையில்லை. அவ்வணியைச் சேர்ந்த யாரை இக்குழுவுக்கு நியமித்தாலும், எல்லாமே ஒன்றுதான் என்றும் அவர் சலிப்படைந்துகொண்டார். 

ஆறுமுகன் தொண்டமானுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுமா, இல்லையா என்பது தொடர்பில் எனக்குத் தெரியாது. ஆனால், கடந்த வாக்கெடுப்பின் போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அரசாங்கத்துக்குத்தான் வாக்களித்தது. சகல தேர்தல்களிலும் அவர், எம்முடன் இணைந்தே போட்டியிட்டுள்ளார் என்றார். 

ஊடக அமைச்சர், பிரதியமைச்சர் பதில் 

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கயந்த கருணாதிலக மற்றும் ஊடகத்துறை பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதாரன ஆகியோர், இன்னும் சில கேள்விகளுக்கு பதிலளித்துக் கருத்துத் தெரிவித்தனர். 

'தகவலறியும் சட்டமூலம் மீதான இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம், எதிர்வரும் 23ஆம் திகதியன்று, நாடாளுமன்றத்தில் இடம்பெறும், அன்றையதினமே அச்சட்டமூலம் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும்' என்று தெரிவித்த ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக, அது சட்டமாகுவதற்கு சில காலங்கள் எடுக்கும் என்பதுடன் இவ்வாறானதொரு சிறந்த சட்டமூலத்தை கொண்டுவந்துள்ள 7ஆவது நாடு இலங்கையாகும்' என்றார். தகவலறியும் சட்டமூலத்தை, தற்போதைய சபாநாயகர் கரு ஜயசூரிய, தனிநபர் பிரேரணையாகக் கொண்டுவந்தார். அவருடைய முயற்சிக்கு, அன்றைய அரசாங்கம் கைகொடுக்காமையால் அது கைகூடவில்லை என்றார். 

இதுதொடர்பில் கருத்துரைத்த ஊடகத்துறை பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதாரன, சட்டமூலத்தை வாக்கெடுப்புக்கு விடுமாறு, ஆளும் தரப்பினர் கோரமாட்டார்கள். எதிரணியினரும் கோரமாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது. எவ்வாறெனினும், ஒருநாள் விவாதமா அல்லது இரண்டுநாட்கள் விவாதமா மற்றும் வாக்கெடுப்பா, இல்லையா உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில், கட்சித் தலைவர்களின் கூட்டத்திலேயே முடிவெடுக்கப்படும்' என்றார். 

'அந்தச் சட்டத்துக்கு பின்னர், தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சிகளுக்கு, ஒரு பொறிமுறையொன்று ஏற்படுத்தப்படும். அவைதொடர்பில் ஆராயப்படுகின்றன என்றும் கூறினார். 'தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கச்சதீவை, இன்று நேற்றல்ல, அத்தீவை கேட்டுக்குகொண்டுதான் இருகின்றார். அது முடிந்துபோன விடயமாகும். அதனை யாரும் கேட்கமுடியாது. நாங்கள் கொடுக்கவும் மாட்டோம்' என்றும் ஊடகத்துறைப் பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதாரன தெரிவித்தார்.