எங்களுக்கு நடக்கும் அநீதியை சொல்ல எங்களிடம் யார் உளர்?
வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் சிவாஜிலிங்கம் அவர்கள் மீது தமிழ் மக்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர்.உள்நோக்கம், பதவி நோக்கம் எதுவுமில்லாமல் தனக்குச் சரியயனப்பட்டதை மிகத்துணிந்து சொல்லக் கூடியவர் அவர்.
கூடவே அரசியலில் தனக்கு வாக்குப்பலம்வேண்டும் என்று நினைத்துச் செயற்படவும் அவரால் முடியாது. சரியானதை யார் செய்தாலும் அதைச்சரி என்று கூறுவதால் அவர் மீது சிலர் வெறுப்புக்கொள்ளலாம் என்பதுடன், அடுத்த பதவிக்கு ஆசைப்படுவோர் சிவாஜிலிங்கம் கூறும் யதார்த்தத்தின் நிழலில் நின்று கொண்டு மக்கள் ஆதரவை தமக்காக்கிக் கொள்வதற்கும் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
இருந்தும் சிவாஜிலிங்கம் இதுவரை தனக்கு மட்டும் நன்மை தரும் நோக்கில் எதையும் செய்யவில்லை என்பது நம் சிற்றறிவின் முடிவு. நேற்று முன்தினம் நடந்த வடக்கு மாகாண சபையின் அமர்வில் அரசாங்கத்தின் ஓர வஞ்சம் குறித்து அவர் பிரஸ்தாபித்திருந்தார்.
கொழும்பு சாலாவ ஆயுதக் களஞ்சியத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தின் போது அப் பகுதியில் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு மாதாந்தம் 50 ஆயிரம் ரூபாய் வழங்கவும் சேதம் அடைந்த வீடுகளை உடன் திருத்துவதற்கும் இதர உதவிகளை வழங்குவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆனால் வன்னிப் போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு எந்த நிவாரண உதவியும் வழங்கப்படவில்லை. ஆக, நல்லாட்சியும் சிங்களவர், தமிழர் என்ற பேதமையை பின்பற்றுகிறது என்பது வடக்கு மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் கருத்தாக இருந்தது.
அவர் கூறிய கருத்து முற்றிலும் உண்மை என்பது மட்டுமன்றி, இந்த உண்மையை ஆழ்ந்து நோக்கும் போது தமிழர்கள் என்பதற்காக சிங்கள ஆட்சியாளர்கள் எத்துணை கொடுமை செய்கின்றனர் என்ற நிதர்சனம் இதயத்தை பிழிகிறது.
அதேவேளை அவர்கள் அப்படிச் செய்தால் அதனை அடித்து இடித்துரைப்பதற்கு கொழும்பு தமிழ் அரசியல் தலைமை எப்போதாவது முன் வந்திருக்கிறதா? என்றால் எதுவுமேயில்லை. மாறாக அரசின் ஆசுவாசத்துக்காக ஜெனிவா சென்று வன்னியில் நடந்தது இன அழிப்பு அல்ல. ஆனால் வட பகுதியிலிருந்து முஸ்லிம்களை புலிகள் வெளியேற்றியமை இன அழிப்பு என்று சொல்லும் அளவிலேயே நம் அரசியல் தலைமையின் மனநிலை உள்ளது.
அவர்களுக்கு மாதாந்தம் 50 ஆயிரம் ரூபாய் உதவித் திட்டம் என்றால் வன்னிப்போரில் குடும்பத் தலைவர்களை இழந்த குடும்பங்களுக்கு என்ன உதவி செய்தீர்கள்?
உங்கள் அநியாயத்துக்கு ஓர் எல்லையே இல்லையா? என்று கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் கேட்பாரா? அல்லது அவரோடு அருகில் இருக்கின்றவர்கள் கேட்பார்களா? தட்டிக் கேட்பதற்கு எங்களிடம் தூய அரசியல் தலைமை இல்லை. ஒரு நல்ல அரசியல் தலைமையை ஏற்படுத்த நாங்களும் தயாரில்லை என்ற போது அவர்கள் சிங்களவர்களுக்கு உதவி, தமிழர்களுக்கு எதுவுமில்லை என்று எடுக்கும் முடிவை எப்படிக் கட்டுப்படுத்த முடியும்?
ஆக, தமிழ் மக்களுக்காக இதய பூர்வமாக குரல் கொடுக்கும் நேர்மையான தமிழ் அரசியல் தலைமை ஒன்று உருவாகாதவரை, உருவாக்காதவரை எல்லாமும் மன வேதனை தரும் நிகழ்வாகவே முடியும்.