காங்கேசன்துறையில் சீமெந்துக் கூட்டுத்தாபனக் காணியில் மக்களை குடியமர்த்த திட்டம்!
வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த 400 குடும்பங்கள், காங்கேசன்துறையில் சீமெந்துக் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான காணியில் குடியமர்த்தப்படவுள்ளனர்.
இதற்காக, காங்கேசன்துறையில் சீமெந்துக் கூட்டுத் தாபனத்துக்குச் சொந்தமாக உள்ள 65 ஏக்கர் காணிகளை சுவீகரிக்க சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
தற்போது தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில், 1109 குடும்பங்கள், 31 நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளன. இவற்றில் 641 குடும்பங்களுக்கு சொந்தமாக காணிகள் இல்லை.
காணிகள் இல்லாத, வலி.வடக்கை பூர்வீகமாகக் கொண்ட 400 குடும்பங்களே, காங்கேசன்துறையில் சீமெந்துக் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான 65 ஏக்கர் காணியில் குடியமர்த்தப்படவுள்ளன.
இதுதொடர்பான அமைச்சரவைப் பத்திரம், அமைச்சர் எ.எம்.சுவாமிநாதனால், அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.