வவுனியா பொருளாதார மத்திய நிலைய விவகாரம் : ஒரு வாரத்தில் பதில்!
வவுனியாவில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையத்திற்கான காணியை தெரிவுசெய்வதில் பாரிய சிக்கல் ஏற்பட்டு வருகின்ற நிலையில், இதற்கான பதிலை இன்னும் ஒருவார காலத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழங்குவாரென, வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், பொருளாதார மத்திய நிலையத்திற்கான காணி தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. இதன்போதே முதலமைச்சர் மேற்குறித்த விடயத்தை தெரிவித்தார். முதலமைச்சர் தொடர்ந்து குறிப்பிடுகையில்-
”மத்திய அரசாங்கத்தினால் வவுனியாவில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையத்தை தாண்டிக்குளத்தில் அமைப்பதற்கு, வடக்கு விவசாய அமைச்சு அனுமதி மறுத்துள்ளது. இதனால் இதனை ஓமந்தையில் அமைக்குமாறு கோரிய போதும், மத்திய அரசாங்கம் அதற்கு அனுமதிக்கவில்லை. இந்நிலையில் தற்போது பொருத்தமான இடங்களை குறிப்பிட்டு, பிரதமருக்கு தெரியப்படுத்தியுள்ளேன். இன்னும் ஒரு வாரத்திற்குள் அவர் அதனை பரிசீலித்து சாதகமான பதிலை தருவார் என நம்புகின்றேன்” என்றார்.
இதன்போது, தாண்டிக்குளம் காணியை பொருளாதார மத்திய நிலையத்திற்கு வழங்குவதாக வட மாகாண சபையால் எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்து, வடமாகாண சபை உறுப்பினர் ஜெயதிலக மற்றும் ஜி.ரி.லிங்கநாதன் ஆகியோர் முதலமைச்சரிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த முதல்வர்-
”வட மாகாண சபையில் பொருளாதார மத்திய நிலையத்திற்கான இடத்தை தெரிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது, அதுகுறித்து நாம் மத்திய அரசுடன் பேசிக் கொண்டிருந்தோம். மாகாண சபையில் தீர்மானம்தான் நிறைவேற்றப்பட்டது. ஆனால் நாம் பொருத்தமானவற்றை பேசியே தீர்மானிக்க வேண்டும்” என்றார்.
எவ்வாறெனினும், குறித்த மத்திய நிலையம் அநுராதபுரத்திற்கோ அல்லது வேறு இடத்திற்கோ செல்லாமல், வவுனியாவிலேயே அமைக்கப்பட வேண்டுமென்பதில் வடக்கு முதல்வர் உறுதியாக உள்ளார்.