உதயங்க வீரதுங்க விரைவில் கைது
ரஷ்யாவிற்கான ஸ்ரீலங்காவின் முன்னாள் தூதுவராக கடமைபுரிந்து தற்போது தலைமறைவாக உள்ள உதயங்க வீரதுங்க விரைவில் கைது செய்யப்படவுள்ளார்.
இதற்காக உக்ரைன் அரசாங்கத்துடன் ஒப்பந்தமொன்றை செய்துகொள்ள ஸ்ரீலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி ஸ்ரீலங்காவில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு உக்ரைனில் பாதுகாப்பு அளித்த குற்றச்சாட்டு உதயங்க வீரதுங்க மீது காணப்படுகின்றது.
அத்துடன் மிக் விமானக் கொள்வனவு, சோமாலிய கடற்கொள்ளையர்களுக்கு ஆயுத விநியோகம் ஆகிய குற்றச்சாட்டுக்களும் அவர் மீது உள்ளன.
அவர் தற்போது உக்ரைனில் தலைமறைவாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையில் கடந்த 14ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட யோசனையில் உக்ரைனுடன் ஒப்பந்தம் செய்துகொள்வதற்கான அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஜப்பான் மற்றம் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு சென்றிருந்தபோது உதயங்க வீரதுங்கவும் அந்த விஜயத்தில் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.