இலங்கையில் அதிகளவு மாற்றங்களை செய்ய வேண்டும்!
ஸ்ரீலங்காவில் நிலைத்துநிற்கக்கூடிய ஜனநாயகம் மற்றும் நல்லாட்சி நிலவுகின்றது என்பதை அடையாளப்படுத்த அதிகளவு மாற்றங்களை செய்ய வேண்டிய தேவையுள்ளதாக நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் சுதந்திரம் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி மோனிகா பின்டோ தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 32 ஆவது அமர்வில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அண்மையில் தான் ஸ்ரீலங்காவிற்கு மேற்கொண்ட விஜயம் தொடர்பிலான விரிவான அறிக்கையை அடுத்த வருட அமர்வில் சமர்ப்பிக்க உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
தன்னுடைய ஸ்ரீலங்கா விஜயம் சிறப்பாக அமைந்ததாகவும், தனது விஜயத்தில் சித்திரவதை மற்றும் கொடூரமான அல்லது மனிதாபிமானமற்ற அல்லது இழிவுபடுத்தும் தண்டனைத் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி ஜுஹான் இ மென்டிஸ் இணைந்துகொண்மடதாகவும் அவர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.
தம்மை ஸ்ரீலங்காவிற்கு அழைத்தமைக்காகவும், ஒத்துழைப்பு வழங்கியமைக்காகவும் ஸ்ரீலங்கா அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடிப்படை சீர்திருத்தங்களை செய்வது குறித்த மாற்றங்களைச் செய்வது தொடர்பிலான ஆர்வம் குறைந்து விடக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஸ்ரீலங்கா கடினமான எனினும் அவசியமான இடைநிலை நீதிப்பொறிமுறை தொடர்பிலான பயணத்தை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனினும் நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் சுயாதீனத் தன்மை பாதுகாக்கப்பட வேண்டுமெனவும் நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் சுதந்திரம் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி மோனிகா பின்டோ தெரிவித்துள்ளார்.