'ஆமாம்... சாந்தனை நான்தான் சுட்டேன்!' -சி.பி.ஐ முன்னாள் அதிகாரி தகவல்
' முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கின் குற்றவாளியான சாந்தனை, திருச்சியில் வைத்து நான்தான் சுட்டுக் கொன்றேன்' என தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருந்தார் சி.பி.ஐ முன்னாள் இன்ஸ்பெக்டர் ஜெபமணி மோகன்ராஜ் . இதையடுத்து, ' 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் சாந்தன் அப்பாவியா?' என்ற கேள்வி அனைத்து தரப்பிலும் வலுவாக எழுந்துள்ளது.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில், கடந்த 2013 டிசம்பர் மாதம் ராஜீவ் காந்தி படுகொலை மர்மங்கள் தொடர்பான விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில், காங்கிரஸ் கட்சியின் திருச்சி வேலுச்சாமி, பத்திரிகையாளர் அய்யநாதன், வழக்கறிஞர் சங்கரசுப்பு, சி.பி.ஐ முன்னாள் அதிகாரி ரகோத்தமன், சி.பி.ஐ முன்னாள் இன்ஸ்பெக்டர் ஜெபமணி மோகன்ராஜ் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். இந்த விவாதத்தில், திருச்சியில் வைத்து ராஜீவ் வழக்கின் சாந்தன் சுட்டுக் கொல்லப்பட்டதாக விவாதம் எழுந்தது. பிறகு, அதுபற்றி பெரிதாகயாரும் எடுத்துக் கொள்ளவில்லை.
இந்நிலையில், ஜெபமணி மோகன்ராஜ் தனது ஃபேஸ்புக் பதிவில், ' திருச்சியில் வைத்து சாந்தனை என் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றேன்' எனப் பதிவிட்டிருந்தார். அவரது இந்தப் பதிவு மனிதஉரிமை ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ' குற்றவாளி எனச் சொல்லப்படும் ஒருவரை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தாமல் சுட்டுக் கொன்றது ஏன்? அவரது உடலை என்ன செய்தார்கள்? அவரது குடும்பத்தாருக்குத் தகவல் கொடுத்ததாக எங்கும் பதிவு செய்யப்படவில்லை. இது நியாயமான செயல் அல்ல என்று இன்ஸ்பெக்டர் மோகன்ராஜூக்குத் தெரியாதா?' என கடும் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.
இதுகுறித்து நமக்குப் பேட்டியளித்த ஜெபமணி மோகன்ராஜ், சாந்தனை சுட்டுக் கொன்றதை உறுதிப்படுத்தினார்.
25 ஆண்டுகளுக்குப் பிறகு புயலைக் கிளப்பியுள்ள சாந்தன் மரணம், வழக்கின் போக்கில் மாறுதலை ஏற்படுத்தும் என மனித உரிமை ஆர்வலர்கள் கருதுகின்றனர். ' சாந்தன் மரணம் விவாதப் பொருளாகி வருவதை அறிந்த முன்னாள் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், புதிதாக ஒரு வீடியோவை பதிவேற்றி இருக்கிறார்.
அதில் பேசும் மோகன்ராஜ், " 2013 டிசம்பரில் தனியார் டி.வியில் இந்த விவாதம் நடந்தது. நிகழ்ச்சி முடிந்ததும் வெளியில் வந்த அய்யநாதன் என்னிடம், ' தியாகி ஜெபமணி இறந்துபோய்விட்டார் என்று நினைத்தேன். அவர் இன்னும் இறந்து போகவில்லை' என்று என்னைப் பார்த்து சொல்லிவிட்டுப் போனார். திருச்சி வேலுச்சாமி என் கையைப் பிடித்துக் கொண்டு, ' மூன்று பேர் தூக்கு பயத்தில் இருந்தேன். இன்றைக்கு நிம்மதியாகத் தூங்குவேன்' எனப் பேசிவிட்டுப் போனார்.
அதற்குள், நான் எதையோ சொன்னது போல செய்தியைத் திரித்துவிட்டார்கள். ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் குண்டு சாந்தனைப் பிடிக்க வேண்டியிருந்தது. அதனால்தான் அவரை சுட வேண்டியிருந்தது. ஆமாம். நான்தான் சுட்டேன். ரகோத்தமன் புத்தகத்தில் சின்ன சாந்தனைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். சம்பவம் நடந்த இடத்தில் ராஜீவ்காந்தி பக்கத்தில் டாக்டர்.ரமாதேவி அருகில் சாந்தன் நிற்கிறார். வழக்கு முடிந்து போய்விடவில்லை என யாரும் பொய் சொல்லிவிட்டு அலைய வேண்டாம். மத்திய அரசு இந்த வழக்கை சாதாரணமாக விட்டுவிடாது. ஜெய் ஹிந்த்" எனக் கோபத்தோடு பேசுகிறார் மோகன்ராஜ்.
-ஆ.விஜயானந்த்