சுமந்திரனின் அமெரிக்க விஜயத்திற்கு எதிர்ப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் அமெரிக்க விஜயத்திற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கிலேயே அவர் அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டிருப்பதாக அமெரிக்காவிலுள்ள இரண்டு புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.
அமெரிக்காவுக்கான ஸ்ரீலங்கா தூதுவர் பிரசாத் காரியவசத்துடன் இணைந்து அமெரிக்க காங்கிரசின் உத்தியோகபற்றற்ற தரப்பினரை அவர் சந்திக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கரிசனைக்கொள்ளாமல் ஸ்ரீலங்கா தூதுவருக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் எம்.ஏ.சுமந்திரன் சந்திப்புக்களை நடத்தவிருப்பதாகவும் ஒபாமாவிற்கான தமிழர்கள் மற்றும் அமெரிக்கத் தமிழர் பேரவை ஆகிய அமைப்புகள் தெரிவித்துள்ளன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைவதற்கு முன்னர் சுமந்திரன் ஐக்கிய தேசியக் கட்சியில் மிகவும் துடிப்புடன் செயற்பட்டவர் எனவும், அவர் தொடர்ந்து அக்கட்சியுடன் நெருக்கமான உறவுகளைப் பேணி வருவதாகவும் அந்த அமைப்புக்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.
அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தினாலும் அவருடைய செயற்பாடுகள் அரசாங்கத்தைக் காப்பாற்றும் வகையிலேயே அமைந்திருப்பதாகவும் அந்த அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன.
புதிய அரசாங்கம் தமிழ் மக்களுக்கு சார்பான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது என்ற செய்தியை அமெரிக்க பிரதிநிதிகளுக்கு தெரியப்படுத்த சுமந்திரன் வொஷிங்டனுக்கு வந்திருப்பதாகவும் அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.
மேலும், தமிழ் மக்களின் பகுதிகளில் உள்ள அதிகரித்த இராணுவ பிரசன்னம், பாதுகாப்புத் தரப்பினரால் தொடரும் துஷ்பிரயோகங்கள், காணாமற்போனவர்களின் உள்ளிட்ட தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் எம்.ஏ.சுமந்திரன் பேசுவாரென எதிர்பார்க்க முடியாது எனவும் அந்த அமைப்புகள் மேலும் தெரிவித்துள்ளன.