Breaking News

சம்பந்தனுக்குத் தெரிந்த நாகரீகம் விக்னேஸ்வரனுக்குத் தெரியாது – கிரியெல்ல!



வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ், சிங்கள அடிப்படைவாதிகளுக்கு களமமைத்துக்கொடுத்து பிரச்சனைகளைச் சிக்கலாக்கும் கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார் என உயர்கல்வி நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், நாட்டில் இன்று மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகள் மதிக்கப்படுகின்றன. அத்துடன் கடந்தகால காட்டுத் தர்பார் ஆட்சி ஒழிக்கப்பட்டு சட்டத்தின் ஆட்சி நாட்டில் நிலைநாட்டப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வருடத்தில் நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களினதும் சிறுபான்மை மக்களினதும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்து சம உரிமைகளை வழங்கியுள்ளது. அத்துடன் தமிழ் சிங்கள மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் ரணில் விக்கிரமசிங்கவும் நாட்டில் விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

வடக்கில் ஒரு அகதிமுகாமும் இருக்கக்கூடாது எனவும் அவரவர் தமது சொந்தக் காணிகளில் குடியேறவேண்டுமென்பதே அரசாங்கத்தின் விருப்பமாகும். அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு படிப்படியாக தமிழ் மக்களின் தேவைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றது.

மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதனை சர்வதேசம் புரிந்துகொள்ளவேண்டும். முப்பது வருட யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டபின்னர் ஒரு வருட காலப்பகுதிக்குள்தான் நல்லாட்சி கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே அனைத்தையும் உடனடியாக நடைமுறைப்படுத்தமுடியாது.

வடக்கு மாகாண முதலமைச்சர் படித்தவர், பண்பானவர் மற்றும் அரசியல் வியூகம் அறிந்தவர் என நினைத்தேன். ஆனால் அவரது தற்போதைய செயற்பாடுகள் கவலையளிக்கின்றன. இராணுவ முகாம்களை ஒரே நாளில் அடைக்கச் சொல்கிறார். அவர் வெளியிடும் கருத்துக்கள் தமிழ், சிங்கள அடிப்படை இனவாதிகளுக்கு தீனிபோடுவதாக அமைந்துள்ளது. அவர் நாட்டுக்குள் பிரச்சனையை மேலும் சிக்கலாக்குகின்றார்.

முதலமைச்சரின் நடவடிக்கைகள் நாட்டில் இனவாதத்தையே தூண்டுகின்றன. வடக்கில் படை­யினரை வைத்­தி­ருக்க வேண்­டிய அவ­சியம் அர­சுக்கு கிடை­யாது. அதே­வே­ளை தேசிய பாது­காப்பு தொடர்­பிலும் அர­சு கவனம் செலுத்த வேண்­டும். எனவே படிப்­ப­டி­யாக வடக்­கி­லி­ருந்து இரா­ணுவம் வெளியேற்­றப்­ப­­டும்.

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அரசின் செயற்பாடுகளுக்கு ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கி வருகின்றார். எதிர்க்கட்சித் தலைவருக்கு அரசியல் வியூகம், தாற்பரியம் மற்றும் விட்டுக்கொடுப்பு என்பன பற்றித் தெரிந்துள்ளது. அந்த அரசியல் நாகரீகம் விக்னேஸ்வரனுக்குத் தெரியாது எனவும் தெரிவித்துள்ளார்.