Breaking News

அனைத்துலக ஆதரவுடனேயே எதிர்காலத்தை வெற்றி கொள்ள முடியும்! - ஜனாதிபதி



அனைத்துலக ஆதரவுடனேயே எதிர்காலத்தை வெற்றி கொள்ள முடியும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கைகள் தொடர்பான பயணம் எனும் தொனிப்பொருளில் நேற்று பண்டாரநாயக்க அனைத்துலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற மாநாட்டில், உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

”கடந்த ஒன்றரை ஆண்டுகளில் எமது வெளிநாட்டுக் கொள்கைகள் தொடர்பாக பாராட்டுக்களும் விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. அரசியல் எதிராளிகளால் அவ்வாறு முன்வைக்கப்படும் பெரும்பாலான விமர்சனங்கள் நிராகரிக்கப்படுகின்றன.

ஐ.நா தலைமையிலான அனைத்துலக அமைப்புக்கள், அதேபோன்று உலகில் உயர் பொருளாதார நிலையைக் கொண்ட நாடுகளுடன் உள்ள தொடர்புகளை சில அரசியல் எதிராளிகள் பிழையான விதத்தில் விமர்சிக்கின்றனர்.

நான் நாட்டைக் காட்டிக் கொடுப்பதாகவும், உலகின் பலமிக்க நாடுகளுக்கு எமது நாட்டை ஆக்கிரமிக்க சந்தர்ப்பத்தை வழங்குவதாகவும் சிலர் குற்றம் சாட்டுகின்றனர். இந்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் நான் நிராகரிக்கிறேன்.

ஒன்றரை ஆண்டு ஆட்சிக் காலத்தில் உலகில் எந்தவொரு நாடோ அல்லது அனைத்துலக அமைப்புக்களோ எம்மீது எந்தவிதமான அழுத்தங்களையும் பிரயோகிக்கவில்லை. அத்தோடு எந்தவிதமான அச்சுறுத்தலும் விடுக்கப்படவில்லை. உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை.

வெளிநாடுகளுடன் பேச்சு நடத்தும் போது அவர்கள் பொதுவான கருத்தினையே முன்வைக்கின்றனர். அதாவது ஜனநாயகத்தை உறுதி செய்தல், மக்களின் சுதந்திரத்தை உறுதி செய்தல, மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகளை உறுதி செய்தல் ஊடகத்துறை உட்பட அனைத்து துறைகளினதும் சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டுமென்றே வலியுறுத்துகின்றனர்.

நாம் போரை பௌதீக ரீதியில் முடித்து வைத்துள்ளோம். ஆனால் மீண்டுமொரு போர் நாட்டில் ஏற்படுவதை தடுக்க எந்தவிதமான காத்திரமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. இவ்வாறானதொரு நிலையில் மீண்டுமொரு போர் ஏற்படுவதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் கடுமையான சவால்களுக்கு மத்தியில் முன்னெடுத்து வருகிறோம்.

அண்மையில் வவுனியா சென்றிருந்தேன். அங்கு தமிழ், சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் தமது நலன்களை கவனிப்பதில்லை என பிரச்சினைகளை முன்வைத்தார்கள். இதனை பார்க்கும்போது எவரும் திருப்தியுடன் இல்லை என்பது புலனாகின்றது.

கடந்த ஆட்சிக் காலத்தில் வடக்கில் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டாலும் அனைத்தும் பௌதீக ரீதியானதாகவே இருந்தன. மக்களின் அடிப்படை வசதிகள், பாடசாலை அபிவிருத்திகள், ஆசிரியர் பற்றாக்குறை நீக்கம் உட்பட தேவையான விடயங்கள் அபிவிருத்தி செய்யப்படவில்லை.

அனைத்துலக நாடுகளுடன் நட்புறவுடன் செயற்படுவதே எனது கொள்கை. இதன்மூலம் நாட்டின் எதிர்காலத்தை வெற்றி கொள்ள முடியும். மீண்டுமொரு முறை போர் ஏற்படாதிருப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுப்பேன்.

தேசிய நல்லிணக்கம், நல்லாட்சி என்ற வசனங்களின் அர்த்தத்தை எமது நாட்டில் சிலர் புரிந்து கொள்வதில்லை. எனவேதான் அதனை ஞானமற்றதாக விமர்சிக்கின்றனர்.

தேசிய நல்லிணக்கத்தை பலப்படுத்துவதன் மூலமும், நல்லாட்சிக் கொள்கையை நிறைவேற்றுவதன் மூலமுமே நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது.

உலகில் எந்தவொரு நாடும் இன்று தனித்து முன்னேற்றம் காண முடியாது. அனைத்துலக தொடர்புகளை பலப்படுத்துவதன் மூலமே ஒருநாட்டின் முன்னேற்றம் தங்கியுள்ளது. எனவே அனைத்துலக அமைப்புக்களுடனான தொடர்புகள் மிக முக்கியமானதாகும்.

இரண்டு ஆண்டுகாலம் பதவியில் இருப்பதற்கு சந்தர்ப்பம் இருந்தும் முன்னாள் அதிபர் ஏன் முன்கூட்டியே அதிபர் தேர்தலை நடத்தினார் என்பது தொடர்பில் இன்றுவரை தெளிவான பதில் கிடைக்கவில்லை.

ஐ.நா. உட்பட வெளிநாடுகள் மற்றும் அனைத்துலக அமைப்புக்களுடன் தொடர்புகள் வீழ்ச்சி கண்டிருந்தனஅனைத்துலகம் எம்மை ஏற்றுக்கொள்ளாது ஒதுக்கி வைத்திருந்தது. பொருளாதாரம் வீழ்ச்சி கண்டிருந்தது.

போர் முடிவுற்றாலும் சிங்கள, தமிழ், முஸ்லிம் என இனங்களுக்கிடையேயான நல்லிணக்கம் ஏற்படவில்லை. இனங்களுக்கிடையேயான சந்தேகங்களே அதிகரித்தன. இலங்கையர்களிடையே சகோதரத்துவம் இருக்கவில்லை.

நாடு என்ற ரீதியில் இவ்விடயம் தொடர்பில் எமக்கு விமர்சனங்கள் உள்ளன. இந்த அனைத்து சவால்களுக்கு மத்தியில் சிறப்பானதொரு நாட்டை கட்டியெழுப்பவே நாம் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறோம்.

மீண்டும் ஆட்சிக்கு வரும் மனோபாவத்துடன் எதனையும் முன்னெடுக்கவில்லை. நாட்டுக்குத் தேவையானதை வழங்குவதே எனது திட்டம்.

குறுகிய காலத்திற்குள் எதிர்பார்க்கும் பெறுபேறுகள் கிடைக்காமல் போகலாம். ஆனால் அனைத்துலக ரீதியில் எந்த இடத்தில் இருந்தோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் உள்ள நெருக்கடியை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் அந்த நெருக்கடியை நாம் எப்படியாவது வெற்றிகொள்வோம்” என்றும் அவர் தெரிவித்தார்.