Breaking News

சமஷ்டி வழங்கப்பட்டால் நல்லிணக்கம் வீழ்ந்துவிடும்- லால் விஜேநாயக்க கணிப்பு

தெற்கில் சமஷ்டி முறைக்கு எதிர்ப்பு காணப்படுகின்ற நிலையில், அம்முறை நடைமுறைப்படுத்தப்பட்டால் தற்போது மேற்கொள்ளப்படுகின்ற நல்லிணக்க முயற்சிகள் வீழ்ந்துவிடக்கூடும் என்று புதிய அரசியலமைப்பு தொடர்பில் மக்கள் கருத்தறியும் குழுவின் தலைவர் லால் விஜேநாயக்க அச்சம் வெளியிட்டுள்ளார்.


எனினும் மற்றவர்களைப் போன்று சமனான மதிப்பு தங்களுக்கு கிடைக்காததினாலேயே சமஷ்டி முறையை வடக்கு மக்கள் கோருவதாகவும் சட்டத்தரணி லால் விஜேநாயக்க கூறினார்.

அரசியலமைப்பு மாற்றத்திற்கான பிரஜைகளின் கருத்துக்களும், யோசனைகளும் அறிக்கையாக நேற்று  முன்தினம் திங்கட்கிழமை மாலை கொழும்பில் வெளியிடப்பட்டது.

அரசியலமைப்பு மாற்றத்திற்கான பிரஜைகளின் முயற்சி இதனை ஏற்பாடு செய்திருந்தது.இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

ஒன்றையாட்சி மற்றும் சமஷ்டி என்பவற்றை பார்க்கும்போது பல்வேறு கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. எமது அனுபவத்தின் மூலம், கடந்த 2015 ஜனவரி 8ஆம் திகதியின் பின்னர் நம்பிக்கை அல்ல, எதிர்ப்பார்ப்பு ஒன்று உருவாகியிருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

தங்களுக்கு சொந்தமான காணிகள் இதுவரை கிடைக்காத போதிலும், எது இல்லாவிட்டாலும் அச்சமின்றி வாழக்கூடிய நிலை ஏற்பட்டிருப்பதாக வடக்கு மாகாண மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே அவர்களுக்கு ஒரு எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் தெற்கு மற்றும் வட பகுதி மக்கள் மனதில் உள்ள அச்சம், சந்தேகம் என்பன முழுமையாக நீங்கவில்லை. விசேடமாக தென்மாகாண மக்களும் நல்லிணக்கத்தை எதிர்பார்க்கிறார்கள். ஆனாலும் அவர்களது மனதில் அச்சம் குடிகொண்டிருக்கிறது.

பாரிய மாற்றத்திற்கு மக்கள் தயாரில்லை. குறிப்பாக சமஷ்டி முறைக்கு தெற்கில் பாரிய எதிர்ப்பு காணப்படுகின்றது. இதனை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் அதன் விளைவாக தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் நல்லிணக்க முயற்சிகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும்.

சமஷ்டி முறையை தெற்கு மக்களில் சிலரும் எதிர்பார்க்கின்ற போதிலும் வடபகுதி மக்களிடம் இம்முறையை ஏன் கேட்கின்றீர்கள் என்று வினவினோம். அதற்கு அவர்கள், தாங்களை மற்றவர்களுக்குச் சமனாக மதிப்பதில்லை என்று கூறுகின்றனர். சமநிலை தொடர்பான பிரச்சினையையே அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவேதான் எமது கருத்துக் கணிப்புக் குழுவின் பரிந்துரைகளில் ஏனைய பிரிவுகளையும் ஒதுக்கிவிட்டு சமூகத்தில் சமநிலையை ஏற்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தினோம். அத்துடன் சமூகத்தில் சமநிலையை ஏற்படுத்துவது தொடர்பில் பல்வேறு ஷரத்துக்களையும் நாம் உள்ளடக்கியுள்ளோம்.

சமஷ்டி முறைமை தொடர்பில் எமது பரிந்துரையில் தெரிவிக்கவில்லை என்ற போதிலும், தமிழ் மக்களின் உரிமைகளை முழுமையாக பாதுகாக்கும்படியான பல்வேறு விதிவிதானங்களை ஏற்படுத்தியுள்ளோம் – என்றார்.