வடக்கு முதல்வரை சந்தித்தார் சுவிஸர்லாந்து தூதுவர்
அரசியல் ரீதியான தீர்வை எதிர்நோக்கி இலங்கை உள்ள நிலையில், எமது மனநிலை எவ்வாறு இருக்கவேண்டும் என்பது குறித்து சுவிஸர்லாந்தின் ஸ்ரீலங்காவுக்கான தூதுவரிடம் கூறியதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
சுவிஸர்லாந்து நாட்டின் ஸ்ரீலங்கா மற்றும் மாலைதீவுக்கான தூதுவர் கைன்ஸ் வோக்கர் நெடகோனுக்கும், வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரனுக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுவரை காலமும் எவ்வாறு இருந்தோம் என்பதை விட்டு, இனி எவ்வாறு இருக்கவேண்டும் என்பது குறித்து கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.இதுவரை ஏதோவொரு விதத்தில் ஒருவரை கட்டுப்படுத்த வேண்டும் என்ற மனநிலை ஒரு இனத்திற்கு இருந்தது. அதனை விட்டு, எமது செயற்பாட்டை எவ்வாறு கொண்டு செல்லவேண்டும் என்பது குறித்தும் சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான தூதுவருக்கு தெளிவுபடுத்தியதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சுவிஸர்லாந்தில் உள்ள சிறுபான்மையினர் மேல் எழ வேண்டும் என்று அந்நாட்டு மக்களும் அரசும் நினைப்பது முக்கியம் வாய்ந்ததாக இருக்கின்றது. தமது நாட்டில் கன்ரோன் இடத்தில் ஸ்ரீலங்காவைப் போன்று சிறுபான்மை பெரும்பான்மை என்ற முறைமை இருந்தாலும், அவர்களுக்கான அதிகாரத்தில் வித்தியாசம் உள்ளது.
சிறுபான்மையினக்கு முன்னுரிமை வழங்கவேண்டும். அவர்களை மேல் எழச் செய்யவேண்டும் என்ற மனநிலையை தமது நாட்டு மக்களும் அரசும் கொண்டுள்ளது.
அதனை ஸ்ரீலங்காவிலும் ஏற்படுத்த தாம் உறுதுணையாக இருப்போம் என்று சுவிஸ் நாட்டு தூதுவர் தெரிவித்ததாக முதலமைச்சர் தெரிவித்தார். சுவிஸர்லாந்தின் தூதுவருடன் இடம்பெற்ற இந்த சந்திப்பானது முக்கியமான சந்திப்பாக உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.