Breaking News

நீதி முன்னெடுப்புக்களில் பங்கேற்பதற்கு ஐ.நா முன்வர வேண்டும் -ஹுசைனுக்கு அறிக்கை

ஸ்ரீலங்காவில் நிலைமாறுகின்ற நீதி முன்னெடுப்புக்களில் பங்கேற்பதற்கு ஐக்கிய நாடுகள் முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை வடமாகாண சபை விடுத்துள்ளது.


ஆட்சி மாறிய போதிலும், இராணுவத்தின் தலையீடுகள், புலனாய்வாளர்களின் கண்காணிப்புக்கள், முன்னாள் போராளிகள் மீதான அடக்கு முறைகள் தொடர்வதாக சுட்டிக்காட்டி ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைனுக்கு வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக்குழு அறிக்கை ஒன்றினை அனுப்பி வைத்துள்ளது.

அந்த அறிக்கையிலேயே இந்த விடயங்கள் கூறப்பட்டுள்ளன.

ஈழத் தமிழர்கள் குறித்த ஐ.நா.வின் நிலைப்பாடானது போர்க்குற்ற விசாரணை என்பதற்குள் மாத்திரம் மட்டுப்பட்டுள்ளதாகவும், இது ஐ.நா. தனது அனைத்துலக மனித உரிமைக்கோட்பாடுகளையும் மனித உரிமைச் சட்டங்களையும் முழுமையாக தனது அங்கத்துவ நாட்டு மக்கள் சார்ந்து முன்னேற்றுவதற்கு தடையாக உள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவேதான் தமிழ் மக்கள் எதிர்நோக்கிவரும் அடிப்படைப் பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் ஐ.நா. ஸ்ரீலங்காவின் நிலைமாறுகால நீதி முன்னெடுப்புகளில் நேரடி பங்குதாரராக வேண்டும் என்றும், நிலைமாறுகால நீதிக்கான முன்னெடுப்புகளை முன்னெடுக்க முடியாத அரசியல் தடுமாற்றமும் வெளிப்படைத்தன்மையும் அற்றதாக தற்போதைய ஸ்ரீலங்கா அரசாங்கம் உள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் நல்லிணக்கத்துக்கும் அரசியல் தீர்வுக்கும் அடித்தளமிட முடியாத சூழலே ஸ்ரீலங்கா காணப்படுகிற நிலையில், அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்திற்குப் பின்னர் மீண்டும் சிங்கள கடும்போக்குவாதிகள் ஆட்சிப் பொறுப்பேற்றால் நல்லிணக்கம் உருவாவது இன்னும் பலவருடங்களுக்குத் தள்ளிப்போகும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் தமிழர்கள் இன்னும் பல அடக்குமுறைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிப்படைக்கு நல்லாட்சி அரசாங்கம் நிலைமாறுகால நீதிக்காக பலதிட்டங்களை முன்னெடுப்பதுபோல் தோன்றினாலும் அடிப்படையில் ஐ.நா.வினதும் மனித உரிமை ஆர்வமுள்ள சர்வதேச நாடுகளினதும் நேரடிப் பங்களிப்பின்றி அதனால் முன்னேற முடியாத நிலைமையே உள்ளது என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

அதேபோன்று மறுபுறம், தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்துடனோ அல்லது எதிர்காலத்தில் அமையக்கூடிய அரசாங்கங்களுடனோ வடக்கு - கிழக்கு தமிழ் மக்களின் உரிமைசார்ந்து பேரம் பேசக்கூடிய அரசியல் அதிகாரமிக்க சக்தி தமிழர் தரப்பில் கிடையாது. மாகாண சபைகளுக்கு உரிய அதிகாரங்கள் வழங்கப்படாத நிலையில் இன்றைய வடமாகாண சபையாலும் பெயருக்குத் தான் மாகாண சபை பிரதிநிதித்துவத்தை வகிக்க முடிகிறது. மாகாண சபைக்குரிய உரிமைகள் பகிர்ந்தளிக்கப்படவில்லை. தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைமைத்துவத்தை வகித்தாலும் தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் அவர்களுக்குக் கிடையாது.

அடிப்படையில் வடக்கு கிழக்கு தமிழர்கள் தமக்கான உரிமைகளை உத்தரவாதப்படுத்துவற்கான காத்திரமான அரசியல் பிரதிநிதித்துவம் அற்றவர்களாக உள்ளனர். இந்நிலையில், நிலைமாறுகால நீதி முன்னெடுப்புகளில் தழிழர் சார்ந்து அதிகாரபூர்வமாக கேள்வி எழுப்பக்கூடிய தரப்பொன்று இல்லை.

இவற்றையெல்லாம் கருத்திற்கொண்டு, வடக்கு - கிழக்கு தமிழர் சார்ந்து ஒரு பிதிநிதித்துவ ஒத்துழைப்பாளராக ஸ்ரீலங்காவின் நிலைமாறுகால நீதி முன்னெடுப்புகளில் பங்கேற்க ஐ.நா. முன்வர வேண்டுமெனக் கோருகிறோம்.ஐ.நா.வுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு ஐ.நா. அழுத்தத்தைப் பிரயோகிக்க வேண்டும்.

ஸ்ரீலங்காவில் நிலைமாறுகால நீதிக்கான ஐ.நா – ஸ்ரீலங்கா கூட்டுப்பொறிமுறையாக இது அமைய வேண்டும். ஐ.நா.வினால் நியமிக்கப்படும் சட்ட அரசியல் நிபுணர் குழுவின் தலைமைத்துவத்தில் ஸ்ரீலங்கா நிபுணர்களும் அடங்கிய கட்டமைப்பாக இது அமைய வேண்டும். புரிந்துணர்வு உடன்படிக்கை என்பது சட்ட ரீதியாக கட்டுப்படுத்தும் அதிகாரத்தைக் கொண்டிருப்பதாலேயே நாம் புரிந்துணர்வு உடன்படிக்கையை வலியுறுத்துகிறோம்.

இத்தகைய ஒரு பொறிமுறையால் மாத்திரமே ஸ்ரீலங்காவில் உண்மையான அர்த்தத்தில் நிலைமாறுகால நீதியை முன்னெடுக்கவும் நல்லிணக்கத்தையும், நிலையான சமாதானத்தையும், தமிழர்களுக்கு உரிய அரசியல் தீர்வையும் ஏற்படுத்த ஒத்துழைக்கவும் முடியும் எனக்காண்கிறோம்.

ஐ.நா.வினால் ஸ்ரீலங்காவின் நல்லிணக்க செயற்பாடுகளுக்காக வழங்கப்படவுள்ள 10 – 15 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையான ஐ.நா. சமாதான நிதிக்கு (UN Peace Fund) பொறுப்புக்கூறும் கடப்பாடு அதை அங்கீகரிக்கும் ஐ.நா செயலாளர் நாயகம் அவர்களுக்கும் உண்டு. எனவே நிலையான சமாதானத்துக்கான நிலைமாறுகால நீதி முன்னெடுப்புகளை உரிய முறையில் அமுல்படுத்த ஐ.நா.வும் பங்குதாரரான பின் நிதி வழங்க அங்கீகரிக்க வேண்டும்.

ஐ.நா. - ஸ்ரீலங்கா கூட்டுப் பொறிமுறைக்கு உட்பட்டதாக பின்வரும் கட்டமைப்புகள் அடங்க வேண்டும். இவ் ஒவ்வொரு கட்டமைப்பும் சர்வதேச நிபுணர்களை தலைமைத்துவமாகக் கொண்டு ஸ்ரீலங்கா நிபுணர்களையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டும்.

வடக்கு - கிழக்கு தமிழர் அரசியல் உரிமை மற்றும் அரசியல் அதிகாரம் குறித்து தீர்வுத் திட்டத்தை முன்னெடுக்கும் குழு, போர்க்குற்ற விசாரணைக்கான கலப்பு நீதிமன்றம், பயங்கரவாத தடைச் சட்டத்தின் காரணமாக காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த விசேட அலுவலகம், வடக்கு கிழக்கில் இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கான கண்காணிப்பகம், மீள்குடியேற்றமும் காணி உத்தரவாதமும் மக்கள் பாதுகாப்பு, படை விலகல், ஒட்டுக்குழுக்களின் செயற்பாடுகளை முற்றாகத் தடுத்தல், சீரான பொலிஸ் மற்றும் சிவில் நிர்வாகம், சிங்கள பௌத்த விஸ்தரிப்பையும் அத்துமீறிய காணி சுவீகரிப்பையும் தடுத்தல், வடக்கு கிழக்கு பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான அலுவலகம்,

போரினால் பாதிக்கப்பட்ட வறிய குடும்பங்கள் பெற்ற கடன்களை (அரச நிறுவனங்களிடம், அரச சார்பற்ற நிறுவனங்களிடம் மற்றும் வட்டிக்கு வழங்கும் தனியார் நிறுவனங்களிடம்) இரத்து செய்து அவர்களை கடன் சுமையிலிருந்தும் தொடர்ச்சியாக கடனாளியாவதிலிருந்தும் விடுவித்தல்,

வடக்கு - கிழக்கு பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் உள்நாட்டு வெளிநாட்டு வளச் சுரண்டலை தடுத்தல், வடக்கு கிழக்கு வாழ் மக்களில் அதிபெரும்பான்மையானோர் கிராமிய மக்களாவர். தீவிர நகரமயமாக்கல் திட்டங்களும் நகரமயப்பட்ட பொருளாதார முன்னெடுப்புகளும் கிராமிய மக்களின் வாழ்வை மேலும் பாதிப்புக்குள்ளாக்கும். எனவே, சூழலியல் நியாயங்களையும் கருத்திற்கொண்டு கிராமிய பொருளாதார முறையை அபிவிருத்தி செய்வதன் மூலம் நிலையான பொருளாதார அபிவிருத்திக்கு அடித்தளமிடல்.

முன்னாள் போராளிகள் மீதான நெருக்கடிகள் தொடர்ந்தவண்ணம் உள்ளன. கைதுகள், தொடர்கண்காணிப்புகளுக்கு உள்ளாகின்றனர். அவர்கள் வெளிமாவட்டங்களுக்கு சென்று வந்தால் விசாரிக்கப்படுகின்றனர். இவர்களின் வங்கிக் கணக்குகளும் கண்காணிக்கப்படுகின்றன. குறிப்பாக முன்னாள் பெண் போராளிகளின் வீடுகளுக்கு புலனாய்வாளர்கள் அடிக்கடி செல்வது கப்பம் கேட்டு நிர்ப்பந்திப்பது நடைபெறுகிறது.

கிராம மட்டங்களில் சிவில் சமூக செயற்பாடுகள் தொடர்ந்தும் புலனாய்வாளர்களாலும் இராணுவத்தினராலும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அரச சார்பற்ற நிறுவனங்கள் தமது ஊழியர் விபரங்களையும் வேலைத்திட்டங்களையும் நிதி வழங்குநர்கள் பற்றிய விபரங்களையும் புலனாய்வாளர்களுக்கு வழங்க நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். கூட்டங்கள் நடைபெறும்போது புலனாய்வாளர்கள் உள்ளிடுவதும் விசாரிப்பதும் இன்றுவரை தொடர்கிறது.

போர் முடிந்து 07 வருடங்கள் பூர்த்தியாகிவிட்டது. இன்று வரையில் இராணுவ மயமாக்கமும் சிங்கள பௌத்த விஸ்தரிப்புகளும் சிறிதேனும் மாற்றமடையவில்லை. சிவில் நிர்வாகத்திலும் பொருளாதாரத்திலும் இராணுவத்தின் தலையீடும் ஆதிக்கமும் இன்றுவரையிலும் தொடர்கிறது – இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.