Breaking News

காணாமல் போன மகனுக்கு ஏழாண்டுகள் கடந்த நிலையில் இறுதிக்கிரியைகள்



காணாமல் போன யோகராஜா சதீஸ்ரூபன் என்ற மகனுக்கு ஏழாண்டுகள் கடந்த நிலையில் தாயாரினால் இறுதிக்கிரியைகள் கடந்த 19 ஆம் திகதி கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியிலுள்ள வீட்டில் வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யோகராஜா சதீஸ்ரூபன் என்பவர் கடந்த 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி வலைஞர்மடத்தில் அவருடைய தாயாரைச் சந்தித்து ஒரு தொகைப் பணத்தை அவரிடமிருந்து பெற்று இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் செல்லப்போவதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏழு ஆண்டுகளாக அவர் மீளத் திரும்பவில்லை என குறித்த நபரின் தாயாரினால் காணாமல்போனோர் தொடர்பான விசாரணைகளில் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்நிலையில் அண்மையில் முள்ளிவாய்க்கால் ஆறாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இணையத்தளங்களில் புகைப்படங்கள் பதிவேற்றப்பட்டிருந்தன. அத்தகைய படங்களில் ஒன்றில் காணாமல்போன சதீஸ்ரூபன் இறந்த உடல்கள் மத்தியில் சடலமாகக் காணப்படுவதை குறித்த நபரின் உறவினர் ஒருவர் பார்த்துள்ளார். இதனையடுத்து அந்த உறவினரால் குறித்த நபரின் தாயாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து தாயாரினால் மகனின் புகைப்படம் வீட்டில் வைக்கப்பட்டு உறவினர்கள் அழைக்கப்பட்டு கடந்த 19 ஆம் திகதி இறுதிக்கிரியைகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து கடந்த 25ஆம் திகதி புதன்கிழமை 8 ஆம் நாள் நிகழ்வும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.