பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு படையெடுக்கும் அரசியல்வாதிகளால் நெருக்கடி
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குப் படையெடுக்கும் அரசியல்வாதிகளால், மீட்பு மற்றும் உதவிப் பணிகளை முன்னெடுப்பதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அனர்த்த நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் எந்த தொந்தரவும் இன்றி பணியாற்ற அனுமதிக்கப்பட வேண்டும் என்றும். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அரசியல்வாதிகள் மற்றும் ஏனைய குழுக்கள் செல்வதைத் தடுக்குமாறும், தாம், பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“பாதிக்கப்பட்ட பிரதேசங்களை நோக்கில் அரசியல்வாதிகளும் ஏனையவர்களும் படையெடுத்துச் செல்வதால், கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட அரநாயக்கவுக்கு, கொழும்பில் இருந்து குடிநீரை எடுத்துச் செல்லும் நீர்த்தாங்கிகள், சென்றடைவதற்கு ஐந்து மணிநேரம் செல்கிறது. அந்த இடத்தைப் பார்க்கச் செல்பவர்களால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலே இதற்குக் காரணம்.
வெள்ள அபாயமுள்ள பகுதிகளில் வாழும் மக்களை புதிய கொழும்புத் திட்டத்தின் கீழ், பாதுகாப்பான இடங்களில் மீளக்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.