தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகள் துரிதப்படுத்தப்பட வேண்டும்
நீண்ட காலமாக சிறைகளில் தடுத்துவைக்கப் பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கையை அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பு முன்வைத்துள்ளது.
தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகளை விசாரணை செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள விசேட நீதிமன்றத்தில் வழங்கு திகதிகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், கைதிகளை விடுதலை செய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படவில்லை எனவும் இந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
தமது விடுதலைக்காக கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட கைதிகள் தற்போது நம்பிக்கை இழந்து உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு, நாட்டிற்காக போராடிய இளைஞர்கள் இன்று தமது வாழ்க்கைகளை இழந்து நான்கு சுவர்களுக்குள் பல வருடங்களாக உளரீதியான சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதாகவும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
எனவே கடந்த காலங்களில் தமது உறவுகளின் விடுதலைக்காக குரல் கொடுத்தவர்கள் தொடர்ச்சியாக போராடினால் மட்டுமே விடுதலையைப் பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.