நீலகிரியில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் கோடை விழா ஆரம்பம் (படங்கள் இணைப்பு)
தென் இந்தியாவில் மிகவும் புகழ் பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்கும் நீலகிரியில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 57–வது பழக்கண்காட்சி குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நேற்று தொடங்கியது.
தோட்டக்கலைத்துறை மூலம் நடத்தப்படும் இந்த கண்காட்சியில் சுற்றுலா பயணிகளை கவர பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. பழங்களை கொண்டு அலங்கார வளைவு மற்றும் அனைத்து வகையான பழங்களை கொண்ட பழ ரங்கோலி, காட்சி அரங்கு அமைக்கப்பட்டு இருக்கிறது.
சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் திராட்சை பழங்களை கொண்டு 7 அடி உயரம் கொண்ட 2 காட்டெருமை வடிவம் மிகப்பெரியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதோடு நீலகிரி மாவட்டத்தின் முக்கிய பழங்களான பிளம், பீச், பேரி, ஸ்ட்ராபெரி, ஆப்பிள், பெர்சிமன், துரியன், கிரேப், புரூட், லிச்சி, ரம்புட்டான், மங்குஸ்தான், வெல்வெட், ஆப்பிள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கிறது.
சமவெளி பகுதிகளில் விளையும் மாம்பழம், கொய்யா, சப்போட்டா, அன்னாசி, திராட்சை, வாழை, பப்பாளி, தர்பூசணி, மாதுளை மற்றும் பலா ஆகிய பழங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கே உரிய சிறு பழ வகைகளான விக்கி பழம், தவிட்டு பழம், குரங்கு பழம், முள்ளிபழம், ஊசிக்கலா, நாவல் பழம், தாட்பூட் பழம், சிறுநெல்லி, மலை நெல்லி, சீமை கொய்யா பழம் மற்றும் மரத்தக்காளி ஆகிய பழங்கள் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது.
இந்த ஆண்டு தோட்டக்கலைத்துறை சார்பாக கன்னியாகுமரி, திருச்சி, தேனி, நெல்லை, ஆகிய 4 மாவட்டங்களில் இருந்து சமவெளிப்பகுதி பழங்களை கொண்டு இந்த கண்காட்சியில் அரங்குகள் மற்றும் பழங்களால் ஆன உருவங்கள் செய்யப்பட்டு இருந்தன.
கடந்த வாரம் கோடை விழா மலர் கண்காட்சி நடத்தப்பட்டது. இதையொட்டி சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல வண்ண மலர்களால் பல்வேறு சிறப்பு உருவங்கள் செய்யப்பட்டு இருந்தன. ஆனால் அப்போது தொடர் மழையின் காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது.
ஆனால் தற்போது மழை நின்று மீண்டும் சமவெளி பகுதிகளில் அனல் காற்று வீசி வருவதால் கடந்த 2 நாட்களாகவே ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து உள்ளது. இன்று காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் பழக்கண்காட்சியை பார்வையிட வந்திருந்தனர். அவர்கள் பழக்கண்காட்சியை கண்டு ரசித்தனர். மேலும் பழங்களால் செய்யப்பட்ட உருவங்கள் அருகே நின்று போட்டோ எடுத்து கொண்டனர்.
கோடை விடுமுறை முடிய இன்னும் ஒரு வாரமே இருப்பதால் தற்போது சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.
பழச்சாகுபடியை நீலகிரி மாவட்டத்தில் ஊக்குவிக்கும் பொருட்டு நாளை (24–ந்தேதி) மதியம் 3 மணியளவில் பழத்தோட்டம் அமைத்தோர்க்கான போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெறுபவர்களுக்கு சுழற்கோப்பை மற்றும் பரிசு கோப்பைகள் வழங்கப்படும். மேலும் பழக்காட்சியில் அரங்கு அமைக்கும் போட்டியில் பங்கு கொண்டு வெற்றி பெற்ற விவசாயிகளுக்கும் இந்த பழக்கண்காட்சியில் கலந்து கொண்ட அரசுதுறை மற்றும் தனியார் அரங்குகள் அமைத்தவர்களுக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்படுகிறது.