Breaking News

வைத்தியர் வரதராஜாவுக்கு அமெரிக்காவில் அரசியல் தஞ்சம்



இறுதிக்கட்ட போரின் முக்கியமான சாட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் வைத்தியர் வரதராஜாவுக்கு அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டுள்ளது.

இறுதிக்கட்ட யுத்ததில் மோதல் தவிர்ப்பு வலயத்தில் சிக்குண்டிருந்த பொது மக்கள் ஷெல் தாக்குதல்களில் காயமடைந்ததுடன் பலர் உயிரிழந்தனர்.

இவர்களுக்கான மருத்துவ சிகிச்சைகளை வைத்தியர் வரதராஜா உள்ளிட்ட சிலர் மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் இறுதிப் போரின் பின்னர் இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்த வைத்தியர் வரதராஜா, இராணுவத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் விடுதலைப் புலிகள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவித்திருந்தார். 

அத்துடன் காயமடைந்த பொதுமக்கள் மீது விடுதலைப் புலிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி கொன்றதாகவும் தெரிவித்திருந்தார்.

எனினும் இலங்கையில் இருந்து வெளியேறி அமெரிக்கா சென்ற அவர் தனது முன்னைய கூற்றை மறுத்து, இராணுவத்தினர் பொதுமக்கள் மீது விஷவாயுத் தாக்குதல் மேற்கொண்டதாக குற்றம் சாட்டினார்.

இந்நிலையிலேயே அவருக்கு அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டுள்ளது.