புஸல்லாவையில் மண்சரிவு அபாயம் : மக்கள் வெளியேற்றம்
கண்டி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, கோகம எனும் தோட்டத்தில் நிலம் கீழ் இறங்கி குடியிருப்புக்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், குறித்த தோட்டப்பகுதியிலுள்ள மக்கள் இடம்பெயர்ந்து, புஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
45 குடும்பங்களைச் சேர்ந்த, 147 பேர் இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளதாக, எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
அத்தோடு, கண்டி மாவட்டத்தின் இரட்டைப்பாதை நீவ்பீகொக் தோட்டத்திலுள்ள 10 குடும்பங்களைச் சேர்ந்த, 47 பேர் இடம்பெயர்ந்து தோட்ட கலாசார மண்டபத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான நிவாரணப் பணிகள் அனைத்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மழை தொடர்ந்தும் பெய்யும் சந்தர்ப்பத்தில், பிரதேசத்தின் குடியிருப்புகள் அனைத்தும் மண்ணில் புதையுண்டு போகும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.