அ.தி.மு.க. சட்டப்பேரவை தலைவராக ஜெயலலிதா ஒருமனதாக தெரிவு
அ.தி.மு.க. புதிய எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை கட் சித் தலைவராக ஜெயலலிதா ஒரு மனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அதற்கான கடிதத்தை ஆளுநர் ரோசய்யாவிடம் அவர் நேற்று கையளித்தார். 6 ஆவது முறையாக தமிழக முதல்வராக நாளை ஜெயலலிதா பதவியேற்கவுள்ளார்.
தமிழகத்தில் கடந்த 16 ஆம் திகதி சட்டப்பேரவை பொதுத்தேர்தல் இடம்பெற்றது.தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகள் தவிர ஏனைய 232 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. எல்லா தொகுதிகளிலும் அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்கள் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட்
டனர். தேர்தல் முடிவுகள் கடந்த வியாழனன்று வெளியா யின. இதில் அ.தி.மு.க. கூட்டணி 134 தொகுதிகளில் அமோக வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. காமராஜர், எம்.ஜி.ஆர்.ருக்குப் பின்னர் தொடர்ந்து 2 ஆவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றி ஜெயலலிதா புதிய சாதனை படைத்தார். இந்த வெற்றியைத் தொடர்ந்து 6 ஆவது முறையாக அவர் தமிழக முதல்வராகிறார்.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் பிற்பகல் சென்னையில் பெரியார், அண்ணா, எம். ஜி.ஆர். சிலைகளுக்கு முதல்வர் ஜெயலலிதா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருக்கு வழியெங்கும் அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பளித்தனர். தொடர்ந்து, அ.தி.மு.க.வின் புதிய எம்.எல்.ஏக்கள் கூட்டம் ராயப் பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இக்கூட்டத்தில், ஜெயலலிதாவை சட்டப்பேரவை அ.தி.மு.க. கட்சித் தலைவராக ஒரு மனதாக தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டம் முடிந்ததும், தீர்மானம் மற்றும் எம்.எல்.ஏக்கள் கையெழுத்து அடங்கிய கடிதம் முதல்வர் ஜெயலலிதாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஆளுநர் ரோசய்யாவை ஜெயலலிதா நேற்று சந்தித்தார். அப்போது ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் ஜெயலலிதா கடிதம் அளித்துள்ளார்.
ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததும், நாளை பகல் 12 மணிக்குப் பின்னர் தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்கிறார். சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் பதவியேற்பு விழா இடம்பெறவுள்ளது.