கிழக்கு பல்கலை மாணவன் மீதான தாக்குதலுக்கு த.தே.ம.முன்னணி கண்டனம்
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட மாணவன் மீதான தாக்குதலுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கண்டனம் வெளியிட்டுள்ளது.
இன்று வியாழக்கிழமை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலட்சியமூர்த்தி சுமேஸ்காந்த் என்ற மாணவர் மீது, சிங்கள மாணவர்கள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
கடந்த யுத்த காலத்தில் வாகரையிலும், முள்ளிவாய்க்காலிலும் இன அழிப்புக்கு உள்ளான மக்களை நினைவுகூரும் செயற்பாட்டில் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் தமிழ் மாணவர்கள் ஈடுபட்டமைக்காகவே சிங்கள மாணவர்களால் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு பாதிக்கப்பட்ட மாணவர் முறைப்பாடு செய்து 48 மணி நேரம் கடந்துள்ள போதும், தற்போது வரை குற்றவாளிகள் எவரும் கைது செய்யப்படவில்லை.
மறுபுறத்தில் பாதிக்கப்பட்ட மாணவரை அச்சுறுத்தி முறைப்பாட்டை மீளப் பெறச் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
குற்றவாளிகள் கைது செய்யப்படாத நிலையில், குறித்த தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் உளவுத் துறையும் பொலிஸாரும் உடந்தையாக இருந்துள்ளார்களா? என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.
தமிழ் மக்களுக்கும் ஆயுதப் படைகள், பொலிஸாருக்கும் இடையிலான முரண்பாடுகள் வரும்போது, பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ய முற்பட்டால், அதனை மறுப்பது, முறைப்பாட்டாளரை அச்சுறுத்தி முறைப்பாட்டை மீளப்பெற முயற்சிப்பது என்ற அணுகுமுறையானது ராஜபக்ச ஆட்சியில் மட்டுமல்ல தற்போதய அரசிலும் தொடர்கின்றது.
போர் வெற்றிவிழா நிறுத்தப்பட்டு நல்லிணக்கச் செயற்பாடுகள் நடைபெறுவதாக கூறி சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் நாடகம் ஒருபுறம் நடைபெற்று வருகின்றது.
இருந்தாலும் மறுபுறத்தில் ஆட்சியாளர்களதும், சிங்கள அரச இயந்திரத்தினதும் போர் வெற்றி மன நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதனை கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவம் வெளிப்படுத்தி நிற்கின்றது.
குறித்த மாணவன் மீதான தாக்குதல் சம்பவத்தினையும் பாதிக்கப்பட்ட மாணவன் தொடர்பில் பொலிஸாரது பாராபட்சமான அணுகுமுறையையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மிகவும் வன்மையாகக் கண்டிப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.