எமது அரசியல் தொய்வின்றித் தொடரும்- தொல். திருமாவளவன் அறிக்கை
மக்களுக்குரிய நலன்களை முன்னிறுத்தும் ‘கூட்டணி ஆட்சி’ உள்ளிட்ட எமது மாற்று அரசியலுக்கான பயணம் மிகுந்த நம்பிக்கையுடன் மேலும் தொய்வின்றித் தொடரும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
2016 சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் எமது கூட்டணி முன்வைத்த ‘மாற்று அரசியலுக்கு’ ஆதரவாக அமையவில்லை என்பது சற்று அதிர்ச்சி அளிக்கவே செய்கிறது. எனினும், மக்கள் அளித்த தீர்ப்புக்குத் தலை வணங்குகிறோம்.
நோக்கம் உன்னதமானது; மக்கள் நலன்களை அடிப்படையாகக் கொண்டது! எமது முயற்சியும் உழைப்பும் தூய்மையானது; தொலைநோக்குப் பார்வை கொண்டது.
நாங்கள் விதைத்த மாற்று அரசியல் ஒரு வருடத்தில் விளையும் பயிர் அல்ல என்பதையும் இன்னும் சில காலம் பொறுத்திருக்க வேண்டும்; இன்னும் கடுமையாக உழைத்திட வேண்டும் என்பதையும் இந்த முடிவுகளிலிருந்து உணர்கிறோம்.
மக்கள் எங்களுக்கு அளித்துள்ள ஒவ்வொரு வாக்கும் கோடி பொன்னுக்கும் மேலானது. ஊழல் கறை இல்லாதது.
நெடுங்காலமாக ஆட்சியதிகாரத்தை நுகர்வதற்கு வாய்ப்பே இல்லாத விளிம்புநிலை மக்களுக்குரிய நலன்களை முன்னிறுத்தும் ‘கூட்டணி ஆட்சி’ உள்ளிட்ட எமது மாற்று அரசியலுக்கான பயணம் மிகுந்த நம்பிக்கையுடன் மேலும் தொய்வின்றித் தொடரும்.
இவ்வாறு தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.