Breaking News

வடக்கு ஆளுநர் வரையறைகளை மீறி செயற்படுகிறார் - சிறிதரன் குற்றச்சாட்டு



வடக்கு மாகாண ஆளுநர் எதேச்சதிகாரமாக செயற்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குற்றம்சுமத்தியுள்ளார்.

ஊடகவியலாளர்களை சந்தித்து நேற்று முன்தினம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் ஆளுநரின் செயற்பாடுகள் வரையறையின்றி செல்வதாக குறிப்பிட்ட அவர், தமிழர்களை அடக்கியாளும் செயற்பாடுகளில் ஆளுனர் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மாகாணத்தை மயான பூமி என தெரிவிக்கும் அளவிற்கு அவரிற்கு அதிகாரங்கள் காணப்படுவதாகவும் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் போராளிகள் இராணுவத்தில் இணையவேண்டும் என ஆளுநர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் போராளிகள் சிறையிலுள்ளனர், ஆயிரக்கனான போராளிகளின் குடும்பங்கள் அவர்களை காணாது நிர்க்கதியாக இன்றும் நிற்கும் நிலை தொடர்கின்றது, இந்த நிலையில் அவர் இவ்வாறு குறிப்பிடுவது தமிழர்களை மீண்டும் அடக்குமுறைக்குட்படுத்த முயற்சிப்பதாக சிறிதரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபை மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஓர் அமைப்பு, நாட்டில் புரையோடிப்போயிருந்த இனப்பிரச்சினையை தீர்ப்பதற்காக, 1987 ஆம் ஆண்டு இந்திய இலங்கை இணைந்து உருவாக்கிய தீர்வு தான் வடக்கு மாகாண சபை.



தமிழர்களுக்கு ஓர் தீர்வை வழங்குதல், அவர்களுடைய இனப்பிரச்சினைக்கு தீர்வை காணுதல் போன்ற விடயங்களை கைவிட்டு மீண்டும் வன்முறையை தூண்டும் வகையில் ஆளுநர் செயற்படுவது கண்டிக்கத்தக்கது என சிறிதரன் தெரிவித்துள்ளார்.