Breaking News

மைத்திரியைச் சந்தித்தார் ஜப்பானிய பிரதமரின் சிறப்புத் தூதுவர்

ஜப்பானில் அடுத்த வாரம் நடக்கவுள்ள ஜி-7 உச்சி மாநாட்டில், பங்கேற்கவுள்ள மைத்திரிபால சிறிசேனவை, ஜப்பானியப் பிரதமர் சின்ஷோ அபேயின், சிறப்புப் பிரதிநிதி சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

சிறிலங்கா வந்த ஜப்பானியப் பிரதமர் சின்ஷோ அபேயின் சிறப்புப் பிரதிநிதி, ஹிரோரோ இசுமி, சிறிலங்கா அதிபர் செயலகத்தில், மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேசினார்.

ஜப்பானில் நடக்கவுள்ள ஜி 7 தலைவர்களின் உச்சி மாநாட்டில் பங்கேற்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ள சிறிலங்கா அதிபருக்கு ஜப்பானிய பிரதமர் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ள ஹிரோரோ இசுமி, சிறிலங்கா அதிபருடன் இருதரப்பு பேச்சுக்களை நடத்துவதற்கு ஜப்பானியப் பிரதமர் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

அத்துடன் சிறிலங்காவில் நல்லிணக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சிகக்காக சிறிலங்கா அதிபர் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளையும் அவர் பாராட்டியுள்ளார்.

இதன்போது, இந்த மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்காக சிறிலங்கா அதிபர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

42 ஆவது ஜி7 உச்சிமாநாடு, வரும் 26-27ஆம் நாள்களில், ஜப்பானின் கஷிகோ தீவில் நடைபெறவுள்ளது. இதில் அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

இந்த மாநாட்டில் பங்கேற்கும் நாடுகளின் தலைவர்களுடன் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பேச்சுக்களை நடத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.