Breaking News

தமிழ் மாணவன் மீதான தாக்குதலைக் கண்டித்து கிழக்கு பல்கலையில் ஆர்ப்பாட்டம்



கிழக்குப் பல்கலைக் கழக மாணவனொருவர் தாக்கப்பட்டமையை கண்டித்து வந்தாறுமூலை பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றில் அனைத்து தமிழ் மாணவர்களும் இன்று வியாழக்கிழமை பகல் ஈடுபட்டனர்.

கடந்த மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு பல்கலைக் கழக தமிழ் மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட மாணவன் நினைவேந்தல் படத்தினை தனது முகநூலில் பதிவேற்றம் செய்தமையை கண்டித்து குறித்த மாணவனை சிங்கள மாணவர்கள் மிலேச்சத்தனமான தாக்குதலை நடாத்தினர்.

இந்த சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு பொலிஸார் மற்றும் பல்கலைக்கழக நிருவாகம் இதுவரை காலமும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை கண்டிக்கும் முகமாகவும், பாதிக்கப்பட்ட மாணவனுக்கு உரிய நியாயத்தை பெற்றுத் தர வேண்டுமென்ற கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக அனைத்து தமிழ் மாணவர்களினால் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

அதிகமாக தமிழ் சமூகத்தைக் கொண்ட கிழக்குப் பல்கலைக் கழகமானது பல்கலைக் கழகத்தில் கடந்த காலங்களில் இருந்து பல்கலைக் கழக அனுமதியில் அதிகரித்த சிங்கள மாணவர்களினால் தொடர்ச்சியாக தமிழ் மாணவர்களுக்கு பல்வேறுபட்ட அச்சுறுத்தல்கள் இதுபோன்ற மிலேச்சல் தனமான இனக்குறோதங்களை விளைவிக்கக் கூடிய செயற்பாடுகள் நடந்தேறிவருகின்றதை மட்டக்களப்பு கல்வி சார் சமூகம் வன்மையாக கண்டனங்களை கடந்த காலங்களில் தெரிவித்து வருகின்ற நிலையில் தொடர்ச்சியாக இவ்வாறான பிரச்சனை அரங்கேறிக் கொண்டே வருகின்றது.

அந்த வகையில் இவ்வார்ப்பாட்டத்தில் மாணவ சமூகமிடையே இனத்துவேசம் தேவையா? தமிழ் நீதிக்கு வேலி இனத்துவமா? கல்வி கற்பதா கலவரம் செய்வதா? நிர்வாகமே என்ன பதில், தாக்கப்பட்ட உறவுக்கு நிர்வாகத்தின் நீதி, பல்கலைக் கழகங்களின் இனத்துவத்தை துண்டாதே, இனவாதத்தை தூண்டும் காடையர்களை இங்கிருந்து வெளியேற்று, எம் தேசத்தில் எம்மை பகைத்து எதனை எதிர்பாரக்கிறாய், பல்கலையில் நீ கற்பது இந்த சமத்துவத்தை தானா?, சக மாணவனை அச்சுறுத்த இனவாதம் தேவையா? உட்பட பல சுலோகங்களை ஏந்தியவாறும், கோசங்களை எழுப்பியவாறும் மாணவர்கள் ஈடுபட்டனர்.

இதன்போது குறித்த இடத்திற்கு விரைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சா.வியாழேந்திரன், சீ.யோகேஸ்வரன் ஆகியோர் மாணவர்களுடன் கலந்துரையாடி பின்பு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்!

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் கடந்த ஆட்சியாளர் காலத்தில் இருந்து தற்போது வரை இவ்வாறான கெடுபிடிகள் தமிழ் மாணவர்களுக்கு எதிரான மிலேச்சல் தனமான தாக்குதல் என்பன நிறுத்தப்படமால் தொடர்ச்சியாக சிங்கள மாணவர்களால் நடைபெற்று வருவதை மக்கள் பிரதிநிதிகளாக நாங்கள் அனுமதிக்க முடியாது.

இதன் முக்கிய காரணம் கடந்த காலங்களில் கிழக்குப் பல்கலைக் கழகத்திற்குள் சிங்கள மாணவர்களின் உள் நுழைவே இதற்கு முக்கியமான காணரமாக உள்ளது. பல்கலைக் கழகத்தில் இவ்வாறான தாக்குதல் மற்றும் சிங்கள மாணவர்கள் அதிகரித்த உள் நுழைவு தொடர்பாக நாடாளுமன்றம் மற்றும் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு போன்றவற்றுடன் கலந்துரையாடி எதிர்காலங்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதியளித்த பின்பு மாணவர்கள் கலைந்து சென்றனர்.