Breaking News

காணாமல் போனதை உறுதிப்படுத்தும் சான்றிதழ் வழங்க நடவடிக்கை ; உறவினர்கள் அதிருப்தி



காணாமல் போனவர்கள் தொடர்பாக காணாமல்போனமையை உறுதிப்படுத்தும் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கை மிக விரைவில் ஆரம்பிக்கவிருப்பதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்தில் நேற்று வியாழக்கிழமை மாவட்ட செயலாளர்களுக்கான அமர்வு இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், காணாமல் போனவர்கள் தொடர்பாக அதனை உறுதிப்படுத்தும் சான்றிதழ் வழங்குவதற்கான அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.

இந்தப் பத்திரம் வர்த்தமானி அறிவிப்பில் வெளியிடுவதற்காக அச்சிற்கு வழங்கப்பட்டுள்ளது. இன்று அல்லது நாளை வர்த்தமானி அறிவித்தலில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும்.

இந்த நடவடிக்கையை முன்னெடுப்பதற்காக பிரிவொன்று அமைக்கப்படவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சபையின் ஊடாக இதற்கான தலைவர் ஒருவரும் நியமிக்கப்படுவார் – என்று தெரிவித்தார்.

இதேவேளை காணாமல் போனதை உறுதிப்படுத்தும் சான்றிதழ் பெற்றுக்கொள்வது தொடர்பில் காணாமல்போனோரின் உறவினர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளதோடு, மரணச்சான்றிதழ் பெற்றுக்கொள்வதற்கும் எதிர்ப்பு வெளியிட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.