தொடர்ந்தும் ஓரங்கட்டப்படும் ஈழத்தமிழர்கள்: அமெரிக்கா
தமிழ் மக்கள் தாம் தொடர்ந்தும் ஓரங்கட்டப்படுவதாக உணர்கின்ற நிலையில், மக்கள் மத்தியில் அந்த எண்ணப்பாட்டை மாற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் வலிமையான திட்டங்களை முன்னெடுக்கவேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
நாட்டில் பல தசாப்தங்களாக நிலவிய யுத்தம் நிறைவுக்கு வந்து ஏழு வருடங்களான போதிலும், இலங்கை தமிழர்கள் இன்னும் தாம் ஒதுக்கப்படுவதாகவே உணர்கின்றனர் என்று அமெரிக்காவின் சிரேஸ்ட அரசியல்வாதியான டான்னி கே டேவிஸ் தெரிவித்தார்.
எனவே அந்த நிலை மாற வேண்டும். இந்த நிலைமையை போக்க இலங்கை அரசாங்கம் வலிமையான திட்டங்களை முன்னெடுக்கவேண்டும். மேலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம் நாட்டில் நிறுவப்பட்டதை தொடர்ந்து தலைவர்கள் பல உறுதிமொழிகளை தமிழர்களுக்கு வழங்கி வருகின்றனர்.
எனினும் திறனான செயற்பாடுகள் இன்மையால், தற்போது அந்த உறுதிமொழிகள் மீளப்பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கை அரசாங்கம் மீளமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வரை இராணுவ விடயங்களில் நிபந்தனையுடனேயே செயற்படவேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.