Breaking News

இயற்கை சீற்றத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 73ஆக உயர்ந்தது




சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் 29 பேர் காயமடைந்துள்ளதுடன் 127 பேர் காணாமல் போயுள்ளனர்.

அரநாயக்க பகுதியில் மண்சரிவு இடம்பெற்ற பிரதேசத்தில் மீட்புப் பணிகள் நான்காவது நாளாகவும் இன்று சனிக்கிழமை காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இரண்டு பேரது சடலங்கள் இன்று முற்பகல் மீட்கப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கிடைக்கின்றன.

இதனையடுத்து உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 73ஆக உயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறிப்பிட்ட சில இடங்களில் வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருந்தவர்கள் இன்று சனிக்கிழமை காலை முதல் திரும்ப ஆரம்பித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 431 தற்காலிக முகாம்களில் தற்போது இரண்டு இலட்சத்து 43 ஆயிரத்து 898 பேர் தங்கியிருப்பதோடு, மொத்தமாக மூன்று இலட்சத்து 46 ஆயிரத்து 514 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறுகின்றது.எனினும் சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கமைய 476 வீடுகள் முழுமையாக சேதமடைந்திருக்கும் அதேவேளை, மூவாயிரத்து 683 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.