நடிகை சவுந்தர்யாவின் உண்மைகள் அம்பலம்..!!
நடிகை சவுந்தர்யாவின் சொத்துக்களை அபகரிக்கப் பார்த்தவர்களின் ஜாமீன் மனுக்களை, பெங்களூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தமிழின் முன்னணி நடிகையாக வலம்வந்த சவுந்தர்யா கடந்த 2004 ம் ஆண்டு விமான விபத்தில் இறந்து போனார். திருமணமாகி சில மாதங்களிலேயே சவுந்தர்யா இறந்து போனது தென்னிந்தியத் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
விமான விபத்து
கடந்த 2004 ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சிக்காக பிரச்சாரம் செய்ய சென்ற சவுந்தர்யா விமான விபத்தில் பலியாகி இறந்து போனார். திருமணமாகி ஒரு வருடத்தில் சவுந்தர்யா இறந்து போனது திரையுலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவரது சொத்துகளை அபகரிக்கப் பார்த்ததாக சவுந்தர்யாவின் உறவினர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சொத்து மோசடி
சவுந்தர்யா இறந்த பின் அவரது சொத்துகள் போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தன. சவுந்தர்யா பெங்களூருவை பூர்வீகமாகக் கொண்டவர். 1999-ம் ஆண்டு பெங்களூரில் உள்ள கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில், வீட்டு மனைக்கான ஒதுக்கீடு பெற்று இருந்தார். அந்த மனை சவுந்தர்யா பெயருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டது.
மைத்துனி சவுந்தர்யா
இறந்த பிறகு 2012-ல் அந்த வீட்டு மனையை போலி ஆவணங்கள் மூலம் அவரது மைத்துனி பாக்யலட்சுமி என்பவர் பெயருக்கு மாற்றி விட்டனர். மேலும் சவுந்தர்யாவுக்கான ஒதுக்கீட்டையும் ரத்து செய்து விட்டனர். இதற்கு கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் அதிகாரியாக இருந்த தயானந்த் மற்றும் மேலும் 2 பேர் உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
ஜாமீன் தள்ளுபடி
இதுகுறித்து பெங்களூரு லோக்ஆயத்தா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் தங்களை கைது செய்யாமல் இருக்க பாக்யலட்சுமியும், தயானந்தும் கோர்ட்டில் முன்ஜாமீன் மனுதாக்கல் செய்தனர். இந்நிலையில் இதனை விசாரித்த நீதிபதி இருவரும் குற்றத்தில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் இருப்பதாக கூறி முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.
போலீஸ் தீவிரம்
முன்ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாக்யலட்சுமி, தயானந்த் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்த போலீசார் தீவிரம் காட்டுகின்றனர். சவுந்தர்யா சொத்து விவகாரம் கன்னடத் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.