அரநாயக்கவில் மீட்புப்பணிகள் தொடரும்; 28 சடலங்களும் 20 உடற்பாகங்களும் மீட்பு
கேகாலை அரநாயக்கவில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்குண்டவர்களைத் தேடும் பணிகள் தொடரும் என மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
அரநாயக்கவில் ஏற்பட்ட மண்சரிவினால், இதுவரை 28 பேரின் சடலங்களும் 20 பேரின் உடற்பாகங்களும் மீட்கப்பட்ட நிலையில், கடும் சவால்களுக்கு மத்தியிலும் மீட்புப் பணிகள் தொடரும் என மீட்புப் பணியில் ஈடுபடும் படையினருக்கு தலைமை தாங்கும் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மண்சரிவினால் காணாமல்போன 132 பேரைத் தேடும் பணிகள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இராணுவத்தினர், விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொதுமக்களால் தேடப்பட்டு வருகின்றது.
ஸ்ரீலங்காவில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக கடந்த செவ்வாய்க்கிழமை அரநாயக்கவில் ஏற்பட்ட மண்சரிவில் மூன்று கிராமங்கள் மண்ணில் புதையுண்டு போயுள்ளன.
சிறிபுர, எலங்கபிட்டிய மற்றும் பல்லேபாகே ஆகிய கிராமங்களே இவ்வாறு மண்சரிவினால் புதையுண்டு பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த மண்சரிவில் 80க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றாக மண்ணில் புதையுண்டதுடன், 280க்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
இந்த மூன்று கிராமங்கள் மீதும் ஏற்பட்ட மண்சரிவில் 150 க்கும் மேற்பட்டோர் புதையுண்ட நிலையில், 28 சடலங்களும் 20 பேரின் உடற்பாகங்களும் மீட்கப்பட்டுள்ளன.
இதேவேளை, மண்சரிவு ஏற்பட்ட அரநாயக்க பிரதேசத்தில் தொடர்ந்தும் மழை பெய்து வருவதனால் மீட்புப் பணிகளில் கடும் சவாலுக்கு மத்தியில் உள்ள போதிலும் இராணுவத்தினரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மீட்புப் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், தற்போதைக்கு மீட்புப் பணிகளை நிறுத்தும் எண்ணம் இல்லை என்று மீட்பு பணியில் ஈடுபடும் படையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, மூன்று கிராமங்களிலும் மண்சரிவினால் பதிக்கப்பட்ட 1100 க்கும் மேற்பட்டோர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.