சம்பூரில் அனல் மின் நிலையம் அமைக்கப்பட மாட்டாது?
சம்பூரில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள அனல் மின்நிலையம் கைவிடப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி முன்வைத்த கோரிக்கையை பரிசீலிப்பதாக இந்திய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.எனவே சம்பூர் அனல் மின்நிலையம் அமைக்கப்படாது என்றே கூறலாம் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்
இந்திய அரசாங்கத்தினால் நிர்மாணிப்பதற்கு ஏற்படாகியுள்ள சம்பூர் அனல் மின்நிலையம் அமைக்கப்படாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த அனல் மின்நிலையத்தை அமைக்க தான் விரும்பவில்லையென இந்தியப் பிரதமர் மோடியிடம் தெரிவித்ததையடுத்து அவர் அதுதொடர்பில் பரிசீலிப்பதாக கூறியுள்ளார்.
அந்த வகையில் அனல் மின் நிலையத்திற்குப் பதிலாக வேறு ஏதாவது முறைமையிலான மின் திட்டத்தை உருவாக்குவது குறித்து ஆராயுமாறும் இந்தியப் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தான் சுற்றாடல்துறை அமைச்சராகவும் பதவி வகிப்பதால் இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சுற்றாடல் துறைசார் நிபுணர்கள் அனல் மின் நிலையத்தால் சுற்றாடலுக்கு தீங்கு ஏற்படும் என்பதை வலியுறுத்துகின்றனர் என்றும் இந்தியப் பிரதமர் மோடியிடம் ஜனாதிபதி எடுத்துக்கூறியுள்ளார். எனவே சம்பூர் அனல்மின் நிலைய நிர்மாணப்பணிகள் கைவிடப்படலாம்.
இலங்கையிலுள்ள சிலர் இந்தியா எமக்கு அனைத்து விடயங்களையும் திணிப்பதாக கூறிவருகின்றனர். ஆனால் நாம் எடுத்துக்கூறினால் இந்தியா அனைத்து விடயங்களையும் ஏற்றுக்கொள்கிறது.
கேள்வி:- அப்படியாயின் சம்பூர் அனல் மின் நிலையம் அமைக்கப்படாதா?
பதில் ஆம். அமைக்கப்படாத நிலையே காணப்படுகின்றது.
கேள்வி இதன் ஒரு பகுதியை ஜப்பா னும் அமைக்கவுள்ளதே? அதுவும் நிறுத்தப் படுமா?
பதில் அதுவும் நிறுத்தப்படலாம். அனல் மின்நிலையத்தை அரசாங்கம் விரும்பவில்லை. எமது நிலையை இந்தியா புரிந்துகொண்டுள்ளது. ஜனாதிபதி அதனை சிறந்த முறையில் எடுத்துரைத்துள்ளார்.