Breaking News

இனப்பிரச்சனைக்கு தீர்வுகாணாவிட்டால் சர்வதேசத்தால் கைவிடப்படுவோம்!



இனப்பிரச்சனைக்குத் தீர்வுகாணாவிட்டால் சர்வதேசம் எம்மை ஒதுக்கித் தள்ளிவிடும் என அமைச்சர் லக் ஷ்மன் கிரி­யெல்ல தெரிவித்தார். மேலும், இன்றைய மைத்திரி-ரணில் கூட்டாட்சியில் இனப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வுகாணாவிட்டால் அதற்கு என்றுமே தீர்வு காணமுடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் 30ஆவது ஆண்டுப் பூர்த்திவிழா கடந்த செவ்வாய்க்கிழமை சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றிய உயர் கல்வி மற்றும் நெடுஞ்­சா­லைகள் அமைச்சர் லக் ஷ்மன் கிரி­யெல்ல அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,

எமது நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்தவுடனே ஆட்சி செய்த அரசியல் தலைமைகள் இனப்பிரச்சனைக்கான தீர்வினைக் கண்டிருக்கவேண்டும். ஆனால் சுதந்திரத்திற்குப் பின்னர் எந்தவொரு அரசியல் கட்சிகளோ அரசியல் தலைமைகளோ இனப்பிரச்சனைக்கான தீர்வைக் காணத் தவறிவிட்டனர்.

இனப்பிரச்சனைக்குத் தீர்வைக் காண்பதன்மூலமே நாட்டில் அபிவிருத்தியை முன்னோக்கிக் கொண்டுசெல்லமுடியும். இனப்பிரச்சனைக்குத் தீர்வுகாணாததாலேயே நாட்டில் 30 வருடம் யுத்தம் இடம்பெற்றது.

சிங்கப்பூரில் இனப்பிரச்சனைக்குத் தீர்வுகண்டார்கள். அதனால் அந்த நாடு எமது நாட்டைவிட அபிவிருத்தியில் முன்னேற்றமடைந்துள்ளது. இனப்பிரச்சனைக்குத் தீர்வுகண்டால் மாத்திரமே சர்வதேச நாடுகள் எமக்கு ஆதரவு வழங்கும். அத்தோடு எமது நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ளும் எனவும் தெரிவித்தார்.