கூட்டத்தை புறக்கணித்தமை புத்திசாலித்தனமானதல்ல - சுமந்திரன்
யாழ்ப்பாண நகர அபிவிருத்தி குறித்து வடமாகாண ஆளுநரினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடலை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உட்பட சில மாகாண சபை உறுப்பினர்கள் புறக்கணித்தமை உரிய நடவடிக்கையல்ல என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாண நகர அபிவிருத்தி செய்வதற்காக உலக வங்கியினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிதியின் மூலம் யாழ்ப்பாண நகரப் பகுதியை அபிவிருத்தி செய்வது குறித்து வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் ஏற்பாட்டில், நேற்று ஆளுநர் அலுவலகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில், வடமாகாண முதலமைச்சர் மற்றும் கே.சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், உட்பட பல உறுப்பினர்கள் சமுகமளிக்கவில்லை.
எனினும் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம். சுமந்திரன், ஈ.சரவணபவன், தர்மலிங்கம் சித்தார்த்தன் உட்பட வடமாகாண சபை உறுப்பினர்களான ஆர்னோல்ட், எஸ் சயந்தன், எஸ் சுகிர்தன், ஆ.பரம்சோதி, அஸ்மின் ஐயூப் உட்பட சிவயோகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.
அத்துடன் வடமாகாண முதலமைச்சர் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் குறித்த கூட்டத்தில் பங்கேற்குமாறு அழிப்பு விடுக்கப்பட்டதாக தெரிவித்த அவர், முதலமைச்சர் வருகை தராமைக்கான காரணம் தெரியாது எனவும் குறிப்பிட்டார்.
மேலும் நேற்றைய கூட்டத்தில் யாழ்ப்பாணத்தில் எவ்வாறான அபிவிருத்திகளை மேற்கொள்வது என்பது தொடர்பாக தீர்மானிப்பதற்கு குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சுமந்திரன் தெரிவித்தார்.