Breaking News

கடற்படை அதிகாரியை பகிரங்கமாக திட்டிய கிழக்கு முதலமைச்சர்



கிழக்கு மாகாண ஆளுனர், அமெரிக்கத் தூதுவர் பங்கேற்ற நிகழ்வு ஒன்றில், ஓரமாக ஒதுங்கி நிற்குமாறு சைகை காட்டிய கடற்படை அதிகாரியை, கிழக்கு மாகாண முதலமைச்சர், நசீர் அகமட், நிகழ்வு மேடையிலேயே வைத்து கண்டபடி திட்டித் தீர்த்தார்.

இந்தப் பரபரப்பான சம்பவம், கடந்த வெள்ளிக்கிழமை, சம்பூர் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது.

சம்பூர் மகாவித்தியாலத்தில், சிறிலங்கா கடற்படை மற்றும் தனியார் நிறுவனம் ஒன்றின் உதவியுடன் அமைக்கப்பட்ட ஆய்வுகூடத் திறப்பு விழா கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

இந்த விழாவில், கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்னான்டோ, அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராகப் பங்கேற்ற அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது நிகழ்வு அரங்கில் இருந்த கிழக்கு மாகாண முதலமைச்சரை, ஆளுனர் ஒஸ்ரின் பெர்னான்டோ மேடைக்கு அழைத்தார்.

வரிசையில் சான்றிதழ்களை வாங்கிக் கொண்டிருந்த மாணவர்களைத் தாண்டி வரமுயன்ற முதலமைச்சரை, அங்கேயே நிற்குமாறு சம்பூர் விதுர கடற்படை முகாமின் கட்டளை அதிகாரி, கப்டன் ரஞ்சித் பிரேமரத்ன, சைகை காட்டினார்.


இதனால் ஆவேசமடைந்த முதலமைச்சர் நசீட் அகமட், மேடையில் ஏறி நின்று, சிறிலங்கா கடற்படை அதிகாரியை கண்டபடி திட்டினார்.

“நெறிமுறை என்னவென்று தெரியாவிட்டால் வெளியே போ முட்டாளே. என்னைத் தடுத்து நிறுத்த நீ யார்? நான் தூதுவரை அதிகம் மதிக்கிறேன். ஆனால் நெறிமுறைகள் தெரிந்திருக்க வேண்டும்.” என்று ஆவேசமாக அவர் திட்டினார்.

முதலமைச்சர் நசீரை ஆளுனர் ஒஸ்ரின் பெர்னான்டோ ஆசுவாசப்படுத்த முயன்ற போதும், அவர் திட்டிக் கொண்டிருந்தார். அமெரிக்கத் தூதுவரும் சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவி, சிறிலங்கா கடற்படை அதிகாரியை, கிழக்கு முதலமைச்சர் அவமானப்படுத்தி விட்டதாக விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள கிழக்கு மாகாண ஆளுனர், தாம் முதலமைச்சரை சமாதானப்படுத்த முயன்றதாகத் தெரிவித்துள்ளார்.குறிப்பிட்ட கடற்படை அதிகாரி தவறிழைத்திருந்தால், அதுபற்றி சிறிலங்கா கடற்படைத் தளபதியிடம் முறையிடலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, முதலமைச்சர் தொடர்ந்து திட்டிக் கொண்டிருந்த போதும், கடற்படை அதிகாரி பதிலுக்கு எதையும் பேசாமல் மௌனமாக இருந்தாகவும், இது பாதுகாப்புப் படைகளின் ஒழுக்கத்தை காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, சம்பூரில் நடந்த நிகழ்வில் கடற்படை அதிகாரியை, கிழக்கு மாகாண முதலமைச்சர் கடிந்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக தமக்கு எந்த முறைப்பாடும் கிடைக்கவில்லை என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.