நாயாறு பகுதியில் சிங்கள குடியேற்றங்கள் அமைக்கும் முயற்சி தடுக்கப்பட வேண்டும்: ரவிகரன்
மகாவலி அபிவிருத்தி அதிகார சபையானது நாயாறு நீராவியடி ஏற்றப்பகுதியில் தனது சுற்றுலாவிடுதியையும், உப அலுவலகத்தையும் அமைத்து அப்பிரதேச பகுதியின் பெயரை மாயாபுர என்று மாற்றம் செய்து புதிய சிங்கள குடியேற்றங்களை நிறுவ முயல்கின்றது. இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் வடமாகாண சபையில் முன்மொழிந்துள்ளார்.
வடமாகாண சபையின் 53ஆவது அமர்வு இன்று (வியாழக்கிழமை) சபைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது. இதன்போதே அவர் இந்த முன்மொழிவை முன்வைத்துள்ளார்.
மேலும், வட மாகாணத்தில் வறுமையில் வாழும் குடும்பங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. அதிலும் முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்கள் மிக வறுமைக்கு உட்பட்டவை என உலக வங்கி ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமையைப் போக்குவதற்கு ஆக்கப்பூர்வமான நடடிவக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதன்படி நலிவடைந்த குடும்பங்களின் நாளாந்த உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், உலக உணவுத் திட்டத்தின் ஊடாக குறிப்பிட்ட காலத்திற்காவது உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் சபையில் கோரியுள்ளார்.