Breaking News

மூன்று அமைச்சுக்களை மீளப்பெற்றது ஏன்?- முதலமைச்சர் விளக்கம்

வட மாகாண சுகாதார அமைச்சர், சத்தியலிங்கத்திடம் இருந்து மூன்று அமைச்சுப் பொறுப்புக்களை மீளப் பெற்றுக் கொண்டமைக்கான காரணம் குறித்து, வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெளிவுபடுத்தியுள்ளார்.

“குறித்த அமைச்சுத் துறைகளை என்னால் நிர்வகிக்க முடியாத நிலையில் அதனை சுகாதார அமைச்சரிடம் ஒப்படைத்திருந்தேன். எனினும் தற்போதுள்ள செயலர் மற்றும் அதிகாரிகள் இந்த அமைச்சுத்துறைகளில் நியமனம் பெற்றவர்களாக இருப்பதால், அதனை நான் மீளப்பெற்றுக் கொண்டேன்.

அத்துடன் முதலமைச்சர் நிதியத்தை அமைப்பது சாத்தியமாகக் கூடிய சூழ்நிலை உள்ளதால், அதற்கு இந்தத் துறைகள் முக்கியமாக தேவைப்படுகின்றன.

அத்துடன், காணி மற்றும் மீள்குடியேற்ற அமைச்சுக்களை நான் வைத்துக் கொண்டு புனர்வாழ்வு அமைச்சை, வேறொரு அமைச்சரிடம் ஒப்படைப்பது பொருத்தமற்றது.இத்தகைய காரணங்களினால் தான், மூன்று அமைச்சுத் துறைகளையும் மீளப்பெற்றுக் கொண்டேனே தவிர, வேறெந்த காரணங்களும் இல்லை.

இதுதொடர்பாக ஊடகங்கள் சில வேறு காரணங்களை குறிப்பிடுகின்ற போதும் அவை எதுவும் உண்மையில்லை” என்று தெரிவித்துள்ளார்.