Breaking News

கிழக்கு முதல்வர் மீது விசாரணை நடத்தக் கோருகிறார் மகிந்த

 கடற்படை அதிகாரியான கப்டன் பிரேமரத்னவை மோசமாகத் திட்டிய, கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் முகமட்டை விசாரணைக்குட்படுத்த வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.

சம்பூரில் நடந்த சம்பவம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். வடக்கில், இரா.சம்பந்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களுடன் கிளிநொச்சி இராணுவ முகாமுக்குள் அத்துமீறி நுழைந்திருந்தார்.

இப்போது, இரண்டாவது சம்பவமாக, கடற்படை அதிகாரிளை, கிழக்கு மாகாண முதலமைச்சர் அவமரியாதைக்குட்படுத்தியுள்ளார். அதுவும் அமெரிக்கத் தூதுவர் முன்பாகவே இவ்வாறான சம்பவம் நடந்துள்ளது.

இதுபோன்ற சம்பவங்கள் முன்னெப்போதும் இலங்கையில் நடைபெறவில்லை. எனவே இதுகுறித்து கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டும்.

இதுபோன்ற சம்பவங்கள் மீள நடைபெறாதிருப்பதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்” என்றும் மகிந்த ராஜபக்ச கோரியிருக்கிறார்.