Breaking News

' விஜயகாந்த் தலைவர் என்றால், பிரபாகரன்?' -வைகோ கூடாரத்தின் அடுத்த விக்கெட்

ம.தி.மு.கவின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் வேளச்சேரி மணிமாறன், தன்னுடைய விலகல் கடிதத்தை வைகோவிடம் கொடுத்துவிட்டார். விரைவில், ' அவர் தி.மு.கவில் ஐக்கியமாக இருக்கிறார்' என்ற தகவலால் ம.தி.மு.க வட்டாரமே அதிர்ந்து போய்க் கிடக்கிறது. 

சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியோடு, வைகோ இணைந்ததை நாங்கள் விரும்பவில்லை. இந்தக் கூட்டணி வெல்லும் என்று எந்த நம்பிக்கையில் வைகோ சென்றார்? பிரபாகரனை தலைவர் என்று சொல்லிக் கொண்டவர், விஜயகாந்தை தலைவராக ஏற்பதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதன்பிறகும் ம.தி.மு.கவில் நீடிப்பதை விரும்பவில்லை' என்கின்றனர் மணிமாறனின் ஆதரவாளர்கள். 

ஆனால், ம.தி.மு.கவினரோ, " தேர்தல் தொடங்கிய நாளில் இருந்தே மணிமாறனுக்கும் தலைவருக்கும் ஒத்துப் போகவில்லை. இந்தத் தேர்தலில்கூட வேளச்சேரி, சைதாப்பேட்டை, தி.நகர் உள்ளிட்ட தொகுதிகளில் தி.மு.கவுக்குத் தேர்தல் வேலை பார்த்தார். தி.மு.க பொருளாளர் ஸ்டாலினிடம் பத்து நாட்களுக்கு முன்பே பேசிவிட்டார். தேர்தல் முடிவு வந்ததும் இணைப்பை விழாவை நடத்தத் திட்டமிட்டிருக்கிறார். இந்தத் தகவல் தலைவருக்கும் கிடைத்தது. ம.தி.மு.கவை உடைக்கும் தி.மு.கவின் முயற்சிதான் இது" எனப் பொருமுகின்றனர். 

வேளச்சேரி மணிமாறனிடம் பேசினோம். " ம.தி.மு.கவில் இருந்து விலகியது உண்மைதான். தமிழ்நாட்டில் நம்பர் ஒன் மாவட்டமாக தென்சென்னையை வைத்திருந்தேன். எடைக்கு எடை இரண்டு மடங்கு வெள்ளியை வைகோவுக்குக் கொடுத்தேன். மதுரை முத்து எம்.ஜி.ஆருக்கு 50 சவரனில் தங்க வாள் கொடுத்தார். அந்த சாதனையை முறியடித்து 150 சவரனில் தங்க வாள் கொடுத்தேன். ஏழு கோடி ரூபாய் வரையில் கட்சிக்கு நிதி கொடுத்திருக்கிறேன். ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்தவன் நான். இதுவரையில் 365 கூட்டங்களை நடத்தியிருக்கிறேன்.

கட்சியை வளர்ப்பதில் அதிகக் கவனம் செலுத்தினேன். ஆனால், எங்களுக்கு எந்த மதிப்பும் இல்லை. தரக்குறைவான வார்த்தைகளில் பேசுகிறார் வைகோ. சட்டமன்றத் தேர்தலில், என்னை வேளச்சேரியில் நிற்கச் சொன்னார். ' நான் போட்டியிட முடியாது' என மறுத்துவிட்டேன். 'இந்தக் கூட்டணி சார்பாக போட்டியிட்டால் வெற்றி பெற வாய்ப்பு இல்லை' என்றும் அவரிடம் சொன்னேன். நான் பிறந்த வளர்ந்த ஊர் வேளச்சேரி. 150 வருஷமாக இங்குதான் வசிக்கிறோம். ஏற்கெனவே 80 ஆயிரம் ஓட்டுக்களை இந்தத் தொகுதியில் வாங்கியிருக்கிறேன். 50 ஆண்டு பொதுவாழ்க்கையில் இருக்கும் வைகோவுக்கு இந்தக் கூட்டணி வெற்றி பெறுமா என்பதுகூட தெரியாதா? அவர் தெரிந்தே தொண்டர்களை பலியாக்கிவிட்டார். 

நீங்கள் தி.மு.கவுக்கு தேர்தல் வேலை பார்த்தீர்கள் என்பது உண்மையா? ஸ்டாலினை சந்திக்க இருப்பதாகச் சொல்கிறார்களே? 

இதை உங்களுக்கு யார் சொன்னது? என் தொண்டர்கள் தேர்தல் வேலை பார்த்தார்கள். ம.தி.மு.கவில் நான் உருவாக்கிய பலர் இருக்கிறார்கள். நான் வேலை செய்யாவிட்டால், அவர்கள் வேலை செய்வார்கள். அதை நான் மறுக்க முடியாது. தாய்க்கழகமான தி.மு.கவுக்கு தேர்தல் வேலை பார்த்தார்கள். 43 தடவை சிறைக்குப் போயிருக்கிறேன். வைகோவை சொந்தத் தகப்பனாக நினைத்துத்தான் இவ்வளவு நாள் இருந்தேன். பெரியார், அண்ணா கொள்கைளுக்காகப் பாடுபடும் கட்சி என ம.தி.மு.கவை நம்பியிருந்தேன். எந்தக் கொள்கையும் அவரிடம் இல்லை. எப்போதும் தவறான முடிவுகளையே எடுத்து வந்தார். ' கோவில்பட்டியில் நின்றாவது வெற்றி பெறட்டும்' என விரும்பினோம். 

ஆறு கோடித் தமிழர்களையும் ஏமாற்றும் வகையில், மனுத்தாக்கல் செய்யாமல் திரும்பிவிட்டார். ஒபாமாவோடு கை குலுக்கியவர். ஒன்பது பிரதமர்களை பார்த்தவர். 25 ஆண்டுகாலம் நாடாளுமன்றத்தில் இருந்தவர் என பல பெருமைகள் அவருக்குக் உண்டு. ஆனால், மக்கள் நலக் கூட்டணி மாநாட்டில், ' விஜயகாந்த் என் தலைவர்' என்று பேசியதை எங்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. பத்திரிகைகளை கடுமையாக விமர்சித்துவிட்டு, 'எங்களைப் பற்றி செய்தி போடுவதில்லை' என்று குறை சொல்வது ஒரு தலைவருக்கு அழகா? பத்திரிகைகள் இல்லாவிட்டால் ம.தி.மு.க வளர்ந்திருக்குமா? மனசு ரொம்ப வேதனையா இருக்கு சார்?. 

தி.மு.கவில் சேரப் போகிறீர்கள் என்பது உண்மையா? 

என்னுடைய தொண்டர்கள் ஐந்தாயிரம் பேருக்கு மேல் இருக்கிறார்கள். தி.மு.கவில் இணைவதா? அ.தி.மு.கவில் இணைவதா? என்ற முடிவை இன்னும் எடுக்கவில்லை. ' கட்சியில் இருந்து விலகக் கூடாது' என பழ.நெடுமாறன், திருமாவளவன் போன்றோர் கூறினார்கள். அவர்கள் பேச்சுக்காகவே 25 நாட்கள் பொறுத்திருந்தேன். மக்கள் நலக் கூட்டணிக்காக சில கூட்டங்களை நடத்தினேன். என்னுடைய உழைப்பை ஒரு பொருட்டாகவே வைகோ எடுத்துக் கொள்ளவில்லை. ஒரு கூட்டத்தில், ' கட்சி ஆரம்பித்து பத்து வருடத்திற்குள் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக விஜயகாந்த் வந்தது மிகப் பெரிய விஷயம்' என்றேன். இதில் வைகோவுக்குக் கோபம். அவரால் இந்தநாள் வரையில் சட்டசபையில் கால்பதிக்க முடியவில்லை என்ற ஆதங்கம்தான். முக்கியமான நேரங்களில், வைகோ எடுக்கும் தவறான முடிவுகளால்தான் ம.தி.மு.கவுக்கு இந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது" என்றார் கொந்தளிப்போடு. 

அடுத்தடுத்த விக்கெட்டுகள் விழுவது அரசியல் ஆட்டத்தை பலவீனப்படுத்தும் என்ற உண்மையை அறியாதவரா வைகோ? 

ஆ.விஜயானந்த்