மஹிந்தவுக்கு இன்று வந்த கரிசனை ஏன் அன்று வரவில்லை? சார்ள்ஸ் கேள்வி
அண்மைய இயற்கை அனர்த்தங்களினால் மாணவர்கள், சிறுவர்கள் பாதிக்கப்பட்டார்கள் என நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதியும், இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
கடந்த 2008 – 2009 காலப்பகுதிகளில் வன்னியில் பல்லாயிரக்கணக்கான மாணவர்களை துடிக்கத் துடிக்க கொல்ல மூல காரணமாக இருந்தவர், இன்று மாணவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டார்கள் என மன வேதனை அடைகின்றார். இந்த வேதனை, ஏன் அன்று வரவில்லை என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பினார்.
இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்கள் தொடர்பிலான விசேட நாடாளுமன்ற அமர்வு நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து பேசிய நாடாளுமன்ற உறுப்பினர், அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் வடக்கில் உயிரிழப்பு இல்லை என்ற போதும், சில இடங்களில் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். மன்னார் மாவட்டத்தில் 44 மீன்பிடி படகுகள் சேதமடைந்துள்ளன. பேசாலையில், 15 இலட்சத்திற்கும் மேல் பெறுமதியான 12 வள்ளங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. ஏனையவையும் பகுதியளவில் சேதமாகியுள்ளன.
அந்த இழப்புக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு உரிய நிவாரணம் தர வேண்டும். அண்மைய வெள்ளத்தால் மன்னாரில் 1512 குடும்பங்களும், வவுனியாவில் 1377 குடும்பங்களும், முல்லைத்தீவில் 1997 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. நந்திக்கடலில், கடல் நீர் பெருக்கெடுத்த காரணத்தால் இறால் வளர்ப்பு பாதிப்படைந்துள்ளது. இதனால், 4000 பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது- என்றார்.